நடிகர் ராமராஜன், கடந்த 1980களின் பிற்பகுதியிலும், 1990களிலும் தமிழ் சினிமாவில் கோலோச்சிய முன்னணி நடிகர். ரஜினி, கமல், விஜயகாந்த் படங்களுக்கு இணையாக ரசிகர்கள் கொண்டாடிய நடிகர் என்றால் அது ராமராஜன்தான். அவரது படங்களுக்கு பி மற்றும் சி சென்டர்களில் ரசிகர் கூட்டம் அலைமோதும்.
நடிகர் ராமராஜன் நடித்தது கிராமத்து கதைகள்தான். ஆனால் அதிலும் கலர் கலராக பேண்ட் சர்ட், கேன்வாஷ் ஷூ, கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு, உதட்டில் கெட்டியாக லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டு நடிப்பார் ராமராஜன். ஆனால் அவரது வெகுளித்தனமான நடிப்பை ரசிகர்கள் வெகுவாக ரசித்தனர்.
ராமராஜன் ஹீரோ, கிராமத்து காதல் கதை, ஊர் பஞ்சாயத்து தலைவர் வில்லன், கவுண்டமணி செந்தில் காமெடி, இளையராஜா இசை இருந்தால் போதும், அந்த படம் 100 நாட்களுக்கு ஓடிவிடும். அந்தளவுக்கு அந்த காலகட்டத்தில் ராமராஜன் படங்கள் டிரண்டிங்கில் இருந்து ரசிக்க வைத்தது.
ராமராஜன் படங்கள் என்றாலே, அதில் பிரதானமாக இருப்பது இளையராஜா இசைதான். இப்போதும் இளையராஜா இசையில் ரஜினி, கமல், மோகன், கார்த்திக் பாடல்களை போலவே, கிராமிய பாடல்கள் என்றால் ராமராஜன் படப் பாடல்கள்தான் ரசிகர்களை உள்ளம் குளிர வைக்கின்றன.
இப்போது 12 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு, ராமராஜன் சாமானியன் என்ற படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். இந்த படத்திற்கும் இசைஞானி இளையராஜா தான் இசையமைத்துள்ளார். ஆனால் இந்த படத்தில் பாடல்கள் அதிகமில்லை. ராமராஜன் படம், இளையராஜா இசை என்றாலே, ஆறு அல்லது ஏழு பாடல்கள் அதில் இருக்கும். மேலும், எதிர்பார்த்த அளவுக்கு பெரிய அளவில் ரசிகர்களை கவரவும் இல்லை.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற ராமராஜன் இதுகுறித்து கூறுகையில், என்னுடைய படங்களை மிகப்பெரிய அளவில் வெற்றி பெறச் செய்தது இளையராஜா இசைதான். சமீபத்தில் சாமானியன் பட இசை வௌியீட்டு விழாவுக்கு, அவரை அழைக்க நேரில் சென்றிருந்தேன். அப்போது வர மறுத்த இளையராஜா, படத்துல 7 பாட்டுகள் இருந்திருந்தால் நானும் விழாவுக்கு வந்திருப்பேன், என்று கூறிவிட்டார் என, ராமராஜன் தெரிவித்துள்ளார்.





