தமிழ் சினிமாவில் படிப்படியாக முன்னேறி புகழின் உச்சத்திற்கு சென்றவர் விஜய் சேதுபதி. நாயகன் மட்டுமல்லாமல் வில்லன் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் அவர் நடித்து வந்தார். கடந்த ஆண்டு பாலிவுட் திரையுலகிலும் அவர் அறிமுகமானார். அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தில் வில்லனாக நடித்திருந்தார் விஜய் சேதுபதி.
ஆனால் அந்த திரைப்படத்தில் அவருக்கு வலுவான கதாபாத்திரம் இல்லை. இதனால் சற்று அதிருப்தியில் இருந்த அவர், இனிமேல் தான் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்கப் போவதில்லை என உறுதியாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ஹீரோ சம்பந்தப்பட்ட திரைப்படங்களிலேயே அவர் நடித்து வருகிறார்.
இப்படியான சூழலில் தான் விஜய் சேதுபதிக்கு 50-வது திரைப்படமாக மகாராஜா அமைந்திருக்கிறது. குரங்கு பொம்மை என்னும் திரைப்படத்தை எடுத்து தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிதிலன் சாமிநாதன் தான் இந்தத் திரைப்படத்தின் இயக்குனர்.
குரங்கு பொம்மை திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும், அது விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. குறிப்பாக இன்றளவும் அந்த திரைப்படத்தை பற்றி பலரும் பேசி வருகிறார்கள். இப்படி ஒரு இயக்குனர் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படத்தை எடுப்பதால் அதன் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருந்தது. இதனை சிறிதளவும் ஏமாற்றம் கொடுக்காமல் திரைக்கதையை அமைத்திருக்கிறார் நிதிலன்.
மகாராஜா திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன், சிங்கம்புலி அபிராமி நட்டி பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் என ஏராளமானோர் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் முதல் பாதி நகைச்சுவையாக உள்ளதாகவும் இரண்டாம் பாதி விறுவிறுப்பாக க்ரைம் திரில்லர் ஜானரில் உள்ளது என்றும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்திருப்பதால், திரையரங்குகளில் முன்பதிவு ஜோராக நடைபெற்று வருகிறது. வசூலிலும் கடந்த இரண்டு தினங்களில் அந்த திரைப்படம் நல்ல லாபத்தை கொடுத்திருப்பதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் முதலில் விஜய் சேதுபதிக்கு பதில் அந்த திரைப்படத்தில், விஜய் ஆண்டனி தான் நடிப்பதாக இருந்ததாம். ஆனால் பல்வேறு சூழல் காரணமாக இந்த திரைப்படத்தின் கதை விஜய் சேதுபதியிடம் சென்று இருக்கிறது.





