தனுஷ் நடிப்பில் இந்த வருடம் இரண்டாவது திரைப்படமாக வெளியாகிறது ராயன். முன்னதாக கேப்டன் மில்லர் திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தன்று வெளியாகி இருந்தது. அருண் மாதேஸ்வரன் இயக்கியிருந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் இதனை அந்த திரைப்படம் முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என்றுதான் கூற வேண்டும்.
ஜிவி பிரகாஷின் பின்னணி இசை மிக சிறப்பாக இருந்தாலும், காட்சிகள் மிக மெதுவாக நகர்ந்ததால் அது படத்திற்கு விறுவிறுப்பை கூட்டவில்லை. தனுஷ் மிகவும் நம்பி இருந்த இந்த திரைப்படம் கடைசியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த சூழலில்தான் தனுஷின் ஐம்பதாவது திரைப்படமாக ராயன் உருவாகி இருக்கிறது.
பவர் பாண்டி திரைப்படத்திற்கு பிறகு தனுஷ் என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். படத்தில் அவர் ராயன் கதாபாத்திரத்தில் நடிப்பது அனைவரும் அறிந்ததே. இதில் நடிக்கும் நட்சத்திரங்களின் பட்டியலும் படத்தின் மீதான எதிர்பார்ப்புக்கு ஒரு காரணம் என்று கூறலாம். முக்கியமாக தனுஷின் அண்ணன் செல்வராகவன் இந்த திரைப்படத்தில் இருக்கிறார்.
எஸ் ஜே சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பால முரளி, சரவணன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்திற்காக தனுஷ் மொட்டை கெட்டப்பில் நடித்திருக்கிறார்.
ராயன் திரைப்படம் குறித்து பேசிய எஸ் ஜே சூர்யா, இந்த திரைப்படத்தில் அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாக கூறினார். குறிப்பாக துஷாரா விஜயனின் கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்படும் என்று தெரிவித்தார். அவரது பெயர்தான் முதலில் வரும் என்றும் அதன் பிறகு தான், தனுஷ் மற்றும் எனது பெயர் வரும் என்றும் அவர் குறிப்பிட்டார். வடசென்னையை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் தற்போது படத்தில் இருந்து புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது வடசென்னையில் தனது சகோதரருடன் ஒரு உணவகத்தை தனுஷ் நடத்தி வருவாராம். அந்த சமயத்தில் அவருக்கும் எதிரி கும்பலுக்கும் இடையே பிரச்சனை உண்டாகுமாம். இதனுடைய தனுஷ் ஒரு போலீஸ் இன்பார்மராக இருப்பதும் எதிரி கும்பலுக்கு தெரிய வர அடுத்தடுத்து நடைபெறும் காட்சிகள்தான் ராயனின் கதை என்று கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க நாளை படத்தின் டிரைலர் வெளியாவது ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுகிறது.





