ஒவ்வொரு மனிதனுக்கும் பிரைவசி என்கிற தனிப்பட்ட சுதந்திரம் இருக்கிறது. அதில் யாராக இருந்தாலும் அத்துமீறி நுழைவதோ அவர்களை தொந்தரவு செய்வதோ மிகப்பெரிய தவறுதலாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் மனிதர்களின் தனிப்பட்ட முறையில் அவர்களது பயன்பாட்டில் இருக்கும் செல்போன்களும் பிரைவசியானதாக பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் டி இமான். பல சூப்பர் ஹிட் படங்களுக்கு டி இமான் இசையமைத்தவர். குறிப்பாக நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், மனம்கொத்தி பறவை நம்ம வீட்டுப் பிள்ளை போன்ற பல படங்களுக்கு டி இமான் இசையமைத்தவர்.
டி இமான் இசையமைப்பாளராக மட்டுமின்றி பாடகராகவும் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர். விஸ்வாசம் மைனா கும்கி கச்சேரி ஆரம்பம் வீராப்பு என பல சூப்பர் ஹிட் படங்களுக்கு டி இமான் இசையமைத்தவர். விசில் படம்தான் டி இமான் இசையமைத்த முதல் படம். இந்த படத்தின் பாடல்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்ற பின் தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்தார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து இசையமைப்பாளர் டி இமான் தெரிவித்த சில கருத்துகள், இணையத்தில் வைரலாகி பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. தனது முதல் மனைவியை பிரிந்த டி இமான் தெரிவித்த அந்த கருத்துகள் நாளடைவில் அப்படியே மறைந்து போய்விட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இசையமைப்பாளர் டி இமான் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, என் போனை யார் வேண்டுமானாலும் எடுத்துப் பார்க்கலாம். பாஸ்வேர்டு எல்லோரிடமும் இருக்கு. நான் புகைப்பிடிப்பதில்லை. மதுப்பழக்கமும் கிடையாது. பெண்கள் விஷயமும் இல்லை.
எல்லோரும் முதல் இரண்டை தாராளமாக சொல்லிவிடுவார்கள். மூன்றாவது விஷயத்தைச் சொல்ல மாட்டார்கள். நான் அதையும் சொல்லி விடுகிறேன். எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் படுத்தவுடன் என்னால் உறங்கிவிட முடிகிறது. கோடி பணம் வைத்திருக்கிறவர்களுக்கு கூட கிடைக்காத வரம். மனம் லேசாக இருந்தால் எதுவும் சாத்தியம்தான் என்று இசையமைப்பாளர் டி இமான் கூறியிருக்கிறார்.





