விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் வந்திருந்தாலும் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த நடிகை சமந்தா “பானா காத்தாடி” படத்தின் மூலம் சோலோ ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். அதன்பின்னர் “கத்தி” படத்தில் விஜயுடன் இணைந்து நடித்திருந்தார். கத்தி படத்தின் வெற்றி கோலிவுட் சினிமாவில் அவருக்கு மிகப் பெரிய ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய படமாக அமைந்தது.
அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய், சூர்யா, விக்ரம் என முன்னணி நாயகர்களின் படங்களில் தொடர்ந்து கதாநாயகியாக நடித்தார். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் டாப் ஹீரோயினாக வளம் வந்த அவர் கடந்த 2017-ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த அவர் கடந்த 2021-ஆம் ஆண்டு தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விவாகரத்து பெற்றுக் கொண்டனர். அதன் பிறகு பல போராட்டங்களை சந்தித்த சமந்தா தற்போதும் டாப் ஹீரோயின்களில் ஒருவராகவே இருந்து வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளாகவே மையோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்ட அவர் பல்வேறு கஷ்டங்களை எதிர்கொண்டாலும் அதையெல்லாம் கடந்து தற்போதும் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தனது விவாகரத்து குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறியதாவது :
வாழ்க்கையில் சில விஷயங்களை நாம் மாற்ற வேண்டும் என்று நினைப்போம். கடந்த மூன்று ஆண்டுகளில் என் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை பார்க்கும் போது இதெல்லாம் நடந்திருக்கக் கூடாது என்று தான் நினைக்கிறேன். ஆனால் எதுவும் நம் கையில் இல்லை வாழ்க்கை என்ன கொடுக்கிறதோ அதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.
எல்லோரது வாழ்க்கையிலும் வலி இருக்கும். அந்த வலியை கடந்து வருவது தான் முக்கியம். வலியை கடந்து விட்டால் அனைவருமே வெற்றியாளர்கள் தான். நான் தற்போது வலியை கடந்து வலிமையாக இருப்பதாக உணர்கிறேன். ஆன்மீகம் என் வலியை கடந்து வலிமை பெற உதவியது என்று சமந்தா கூறியது குறிப்பிடத்தக்கது.





