தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளை எடுப்பதன் மூலம் தனித்து காணப்படுபவர் இயக்குனர் பிரபு சாலமன். காதலை வேறொரு கோணத்தில் தூக்கி உயர்த்தும் பிரபு சாலமனின் இயக்கத்திற்கு என்று இங்கு தனி ரசிகர்கள் உண்டு. குறிப்பாக இயற்கையோடு அவர் இணைந்து எடுக்கும் திரைப்படங்களும் வெற்றி பெற்றிருக்கின்றன.
கண்ணோடு காண்பதெல்லாம் என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அவர், அங்கிருந்து ஒரு வெற்றியை கொடுப்பதற்காக போராடி வந்தார். விக்ரமை வைத்து கிங் என்னும் திரைப்படத்தை இயக்கியது பிரபு சாலமன் தான். ஆனால் அந்த திரைப்படம் சரியாக போகவில்லை.
பிறகு, நடிகர் கரணை வைத்து கொக்கி எனும் திரைப்படத்தை இயக்கினார். விமர்சன ரீதியாக இந்த திரைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனால் பிரபு சாலமனுக்கு அந்த திரைப்படம் பெயரளவில் பெரிய புகழை தேடித் தரவில்லை. பிறகு சத்யராஜ் மகனை வைத்து லீ என்ற படத்தை இயக்கி தோல்வி அடைந்தார். அடுத்து அவர் இயக்கிய லாடம் திரைப்படமும் சரியாக போகவில்லை.
இப்படியான சூழலில் தான், ஒரு சிறிய இடைவேளை விட்டு மீண்டும் இயக்கத்திற்குள் நுழைந்தார் பிரபு சாலமன். இந்த முறை அவர் இயக்கத்தில் வெளியானது மைனா. தமிழ் சினிமா ரசிகர்களை உலுக்கும் கிளைமாக்ஸ் காட்சி நிறைந்த திரைப்படங்கள் எவை எவை என பட்டியலிட்டால், அது நிச்சயம் மைனாவும் இடம் பிடிக்கும்.
அந்த அளவுக்கு அதன் காட்சிகளை செதுக்கியிருப்பார் பிரபுசாலமன். காதல் திரைப்படமாக வெளியான இது மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பிறகு யானையை மையமாக வைத்து அவர் எடுத்த கும்கி திரைப்படம் வெள்ளி விழா கண்டது. கயல் திரைப்படமும் ஓரளவு பேசப்பட்ட நிலையில், அதன் பிறகு வெற்றி திரைப்படங்கள் கொடுக்க முடியாமல் அவர் தவித்து வருகிறார்.
குறிப்பாக தொடரி, காடன், செம்பி என அவர் இயக்கிய மூன்று திரைப்படங்களும் வெற்றி படமாக அமையவில்லை. இந்த நிலையில்தான் தற்போது மம்போ என்னும் படத்தை இயக்க உள்ளார். ஆசிய படத்திலேயே நிஜ சிங்கத்தை வைத்து எடுக்கப்படும் முதல் திரைப்படம் என்று அதன் போஸ்டரிலேயே குறிப்பிடப்பட்டிருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறது. இந்தப் படத்தின் ஹீரோவாக, நடிகை வனிதா விஜயகுமாரின் மகனான விஜய் ஸ்ரீ ஹரி நடிக்கிறார். யோகி பாபுவும் படத்தில் இடம் பெற்றுள்ளார். சிங்கத்தை வைத்து படம் எடுக்கப்படுவதால் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க செய்துள்ளது.





