பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மகன் சூர்யா. சரவணன் என்னும் பெயர் கொண்ட அவர் திரைத்துறையில் நடிப்பதற்காக, தனது பெயரை சூர்யா என்று அடையாளப்படுத்திக் கொண்டார். ஆரம்பத்தில் அவருக்கு மிகச் சிறிய கதாபாத்திரங்களை நடிக்க கிடைத்தது. பெரிதாக எந்த இடத்திலும் சூர்யாவின் முகம் வெளிவரவில்லை.
இப்படியான சூழலில், விஜய் மற்றும் அஜித் ஆகியோரை வைத்து நேருக்கு நேர் படத்தை எடுத்தார் வசந்த். இதற்கான சூட்டிங் ஆரம்பமான நிலையில், சில பல காரணங்களால் அஜித் அதில் நடிக்க முடியாமல் போனது. அந்த வாய்ப்பு சூர்யாவுக்கு கிடைக்க அதை கெட்டியாக பிடித்துக் கொண்டார் நடிகர்.
இங்கிருந்து தான் சூர்யாவின் வெற்றிப் பயணம் ஆரம்பமானது. தொடர்ந்து கதாநாயகனாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சி செய்த சூர்யாவுக்கு, தோள் கொடுத்து உதவி செய்தனர் இயக்குனர்கள் கௌதம் மேனன் மற்றும் பாலா. இதில் பாலா இயக்கத்தில் அவர் நடித்த நந்தா மற்றும் பிதாமகன் என இரண்டு திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றன.
இதே போல் காக்க காக்க திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து பலரது பாராட்டையும் பெற்றார் சூர்யா. இதன் பிறகு பல வெற்றி படங்களையும் சில தோல்விகளையும் கண்ட சூர்யா இன்று தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகராக இருக்கிறார். இந்த நிலையில் சமீப காலமாகவே அவர் மும்பையில் தான் தனது குடும்பத்தினருடன் பொழுதைக் கழித்து வருகிறார்.
அவரது குழந்தைகள் இருவரும் மும்பையிலேயே கல்வி பயில்வதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், அங்கு அவர் மிகப்பெரிய சொகுசு அப்பார்ட்மெண்டில் வீடு வாங்கி இருக்கிறார். இதன் தொகை மட்டும் 70 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சூர்யாவின் சொத்து மதிப்பு மட்டும் 350 கோடி ரூபாய் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.
தற்போது அவர் நடித்து முடித்திருக்கும் கங்குவா திரைப்படத்திற்காக மட்டும் 30 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி இருப்பதாக திரைத்துறை வட்டாரத்தில் பேசப்படுகிறது. அவர் வைத்திருக்கும் கார்களில் மிக உயர்ந்த விலைக்கு கொண்டதாக பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார் பார்க்கப்படுகிறது. இதன் விலை மட்டும் ஒரு கோடியே 38 லட்சம் என்று கூறப்படுகிறது. சூர்யா நடிப்பில் கங்குவா திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாகும் நிலையில் தற்போது அவர் கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடித்து வருகிறார்.





