காமெடி நடிகராக இருந்து, இப்போது பல படங்களில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார் யோகிபாபு. துவக்கத்தில் உருவக்கேலி செய்யும் காட்சிகளில் மட்டுமே யோகிபாபுவை சில இயக்குனர் பயன்படுத்திய நிலையில், மணிகண்டன் இயக்கிய காக்கா முட்டை படத்தில் யோகிபாபு நடிப்பு ரசிகர்களால் கவனிக்கப்பட்டது. எனக்கே விபூதி அடிக்க பார்த்தேயில்ல நீ, என்ற அவரது வசனம் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது.
தொடர்ந்து ரஜினிகாந்த், விஜய், அஜீத்குமார், தனுஷ், சிவகார்த்திகேயன், சூர்யா, விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி படங்களில் காமெடி கேரக்டர்களில் நடித்து பெரிய அளவில் முன்னணி காமெடி நடிகரான யோகி பாபு இப்போது படத்தில் நடிக்க ஒரு நாள் சம்பளமாக ரூ. 12 லட்சம் வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இம்சை அரசன் 23ம் புலிகேசி, அறை எண் 305ல் கடவுள், புலி, கசட தபற போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சிம்புதேவன் இயக்கிய போட் என்ற படம் வருகிற ஆகஸ்ட் 2ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தில் யோகிபாபு கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் எம்எஸ் பாஸ்கர், கெளரி கிஷன், சின்னிஜெயந்த், மதுமிதா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
இந்நிலையில் போட் படத்தின் பிரமோவுக்கான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியின் படத்தின் இயக்குனர் சிம்புேதவன் உள்ளிட்ட படத்தில் நடித்த நடிகர், நடிகையர் கலந்துக்கொண்டனர். ஆனால் படத்தின் நாயகன் யோகிபாபு, 3 மணி நேரம் தாமதமாக வந்து செய்தியாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டார்.
வேறு ஒரு படப்பிடிப்பில் கலந்துக்கொண்டதால், இங்கு வர தாமதமாகி விட்டது என்று செய்தியாளர்களிடம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட யோகிபாபு, படத்தில் நடித்த அனைவருக்கும் நன்றி, இயக்குனர் சிம்பு தேவனுக்கு நன்றி, இந்த படத்தை மக்களிடம் நல்லபடியாக கொண்டு சென்று வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று, அங்கிருந்த செய்தியாளர்களிடமும் கேட்டுக்கொண்டார்.
அப்போது அங்கிருந்த செய்தியாளர்கள் ஒருவர், நடிகர் யோகிபாபுவிடம் தொடர்ந்து கேள்விகளை எழுப்பினார். அவர் கடுப்பாகி, மேடையை விட்டு இறங்கிய பிறகும் தொடர்ந்து அவரை பார்த்து கேள்வி கேட்டார். அதனால் பயங்கர கடுப்பான யோகி பாபு, மைக்கை ஆப் பண்ணீட்டு வெளியே வா, உனக்கு சொல்றேன், என்று சொடக்கு போட்டு சொல்லி மிரட்டும் தொணியில் பேசிவிட்டு சென்றுள்ளார். இந்த வீடியோ இப்போது வைரலாகி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





