தமிழ் சினிமாவில் உள்ள இளம் நடிகர்களில் மிகவும் கவனிக்கப்படும் ஒருவராக இருப்பவர் நடிகர் சித்தார்த். மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக துவக்கத்தில் பணிபுரிந்த சித்தார்த், நடிகர் கமல்ஹாசனின் மிக தீவிரமான ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ் படத்தில் நாயகனாக அறிமுகமானவர்.
பாய்ஸ் படத்தை தொடர்ந்து ஆயுத எழுத்து, உதயம் என்எச் 4, காதலில் சொதப்புவது எப்படி, ஜிகர்தண்டா, அரண்மனை 2, காவியத் தலைவன், தீயா வேலை செய்யணும் குமாரு, அருவம், சிவப்பு மஞ்சள் பச்சை, அருவம், சித்தா, இந்தியன் 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
சித்தார்த் தமிழ் படங்கள் மட்டுமின்றி தெலுங்கில் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் அவர் நடித்த படங்களில் மிகவும் உணர்ச்சிபூர்வமாக இருந்த படம் கடந்த ஆண்டில் வெளியான சித்தா படம்தான். இந்த படத்தை பண்ணையாரும், பத்மினியும் படத்தை இயக்கி இருந்த இயக்குனர் அருண்குமார் டைரக்ட் செய்திருந்தார்.
சித்தா படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் நாயகனாக சித்தார்த், நாயகியாக நிமிஷா சஜயன் நடித்திருந்தனர். திண்டுக்கல் மாவட்டம், பழனி இந்த படத்தின் கதைக்களமாக இருந்தது. இந்த படத்தில் சுகாதாரத்துறை அலுவலராக சித்தார்த், துப்புரவு பணியாளராக நிமிஷா சஜயன் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் ஐதராபாத்தில் 69வது பிலிம்பேர் விருதுகள் வழங்கப்பட்ட விழாவில் சிறந்த படம் சித்தாவுக்கு அறிவிக்கப்பட்டு மொத்தம் 7 விருதுகளை இந்த படம் பெற்றது. சிறந்த இயக்குனர் அருண்குமார், சிறந்த நடிகர் சித்தார்த், சிறந்த நடிகை நிமிஷா சஜயன், குணச்சித்திர நடிகை அஞ்சலி நாயர், சிறந்த பாடகி கார்த்திகா வைத்தியநாதன், சிறந்த இசை, திபு நினன் தாமஸ் மற்றும் சந்தோஷ் நாராயணன் என ஏழு விருதுகளை சித்தா படம் வென்றது.
சித்தா படத்துக்கு பிலிம்பேர் 7 விருதுகளை கொடுத்து மிகப்பெரிய அங்கீகாரம் தர முக்கிய காரணம், அந்த படத்தின் கதைக்கருதான். 10 வயதுக்குட்பட்ட சிறுமிகளை, ஏமாற்றி கடத்திச் சென்று பாலியல் வன்முறை செய்யும் நபர்களை பற்றிய கதை தான் அது. சமூக விழிப்புணர்வை தரும் மிக பொறுப்புள்ள படமாக அது உருவாக்கப்பட்டு இருந்ததால், 7 விருதுகளை எளிதாக வென்று, தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்துள்ளது.





