- Advertisement -
Homeபொழுதுபோக்குதன் மீது புகார் அளித்தவரிடம் 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்கும் யுவன் சங்கர்...

தன் மீது புகார் அளித்தவரிடம் 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்கும் யுவன் சங்கர் ராஜா… காவல் நிலையம் வரை சென்ற இசையமைப்பாளர் விவகாரத்தின் பின்னணி என்ன…

- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்கிறார் யுவன் சங்கர் ராஜா. அதுவும் 90ஸ் கிட்ஸ் களில் பெரும்பாலும் விருப்பமான இசையமைப்பாளர் யார் என்றால் அது யுவன் என்று தான் இங்கு பலரும் கூறுவார்கள். அந்த அளவுக்கு பல பாடல்களை அவர் கொடுத்திருக்கிறார்.

 

அரவிந்தன் திரைப்படத்தில் தொடங்கி தற்போது விஜயின் கோட் படம் வரை அவரது வெற்றிப் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இப்படியான சூழலில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மீது நபர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியா பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் யுவன் சங்கர் ராஜா தனது ஸ்டூடியோவை அமைத்திருந்தார். இந்த நிலையில் அதற்கு சரியான வாடகை பணத்தை கொடுக்கவில்லை என்று கூறி வீட்டின் உரிமையாளர் காவல் நிலையத்தை நாடினார்.

 

வீட்டின் உரிமையாளரின் சகோதரர் முகமது ஜாவித் அளித்திருந்த புகாரில், கடந்த இரண்டு ஆண்டுகளாக யுவன் சங்கர் ராஜா தனக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு இருந்ததாகவும், இதற்கான பாக்கித் தொகையான 20 லட்சத்தை அவர் செலுத்தவில்லை என்றும் கூறியிருந்தார். வாடகையை கேட்கும் போதெல்லாம் யுவன் சங்கர் ராஜா கொடுக்காமல் தட்டிக் கழித்து அலட்சியம் காட்டியதாகவும் அவர் தனது புகாரில் தெரிவித்து இருந்தார்.

 

இது தொடர்பாக அவரை அலைபேசியில் அழைத்த போதும் அவர் அதை எடுக்கவில்லை என்றும், தற்போது எதுவும் சொல்லாமல் அந்த வீட்டை காலி செய்வதாகவும் தனது புகாரில் தெரிவித்திருந்தார். இசைஞானி இளையராஜாவின் மகன் மீது சுமத்தப்பட்ட இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தன் மீதான புகார் குறித்து யுவன் சங்கர் ராஜா பதில் அளித்துள்ளார்.

 

அதில் வீட்டின் உரிமையாளர் தன் மீது பொய்யான புகாரை அளித்ததாக யுவன் சங்கர் ராஜா தெரிவித்திருக்கிறார். தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சியில் வீட்டின் உரிமையாளர் நடந்து கொண்டிருப்பதாக கூறி இருக்கும் யுவன் சங்கர் ராஜா, 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். இந்த விவகாரம் திரைத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

சற்று முன்