ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் திரைப்படங்களைத் தொடர்ந்து நடிகர் சூர்யா, இயக்குனர் பாலா உடன் இணைந்தார். வணங்கான் என தலைப்பிடப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு, கன்னியாகுமரி சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்றது. படத்தை சூர்யாவின் 2டி எண்டர்பிரைசஸ் நிறுவனமே தயாரித்தது. ஆனால் சூட்டிங்கின் போது ஏற்பட்ட மனக்கசப்பால் சூர்யா – பாலா இடையே விரிசல் விழுந்தது. வணங்கான் படத்திலிருந்து விலகுவதாக சூர்யா அறிவித்த நிலையில், அருண் விஜய்யை வைத்து தனது படத்தை எடுத்தார் பாலா.

இது ஒரு புறம் இருக்க, வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் படங்களை எடுத்த சிறுத்தை சிவா, சூர்யாவுடன் இணைய போவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. அந்த நேரத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறுத்தை சிவாவை அழைத்து கதை தயார் செய்யும்படி கூறியதால், சூர்யாவின் ப்ராஜெக்டை தள்ளி வைத்த சிறுத்தை சிவா ரஜினியை வைத்து அண்ணாத்த திரைப்படத்தை எடுத்தார். 2021 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகிய அந்த திரைப்படம், கலவையான விமர்சனத்தை பெற்றது.
இந்நிலையில் வணங்கான் படத்திலிருந்து விலகி இருந்த சூர்யா, உடனடியாக சிறுத்தை சிவா உடன் சூட்டிங் கிளம்பினார். ஸ்டூடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தின் வேலைகள், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது. இந்த படம் மூலம் பாலிவுட் நடிகைகளான திஷா பதானி மற்றம் மிருணாள் தாகூர் ஆகியோர் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார்கள்.

காமெடி கதாபாத்திரங்களில் கோவை சரளா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். கங்குவா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படம், தமிழ் தெலுங்கு கன்னடம் இந்தி உள்பட 10 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் தயாராகிறது. சமீபத்தில் கொடைக்கானல் வனப்பகுதிகளில் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்றது.
நிகழ்காலத்துக்கும், முந்தைய காலத்துக்கும் இடையே உள்ள தொடர்புதான் கங்குவா திரைப்படத்தின் கதைக்களம் என்று கூறப்படுகிறது. படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் சூர்யா காட்சி அளிக்கும் நிலையில், அவருக்கு மேக்கப் போடுவதற்கு மட்டுமே 2:30 மணி நேரம் ஆகும் என்றும், இதனால் காலை ஆறு முப்பது மணிக்கு அவர் படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கு வந்து விடுவார் என்றும் கூறி, சூர்யாவின் டெடிகேசனை பலரும் பாராட்டினர்.
கங்குவா சூர்யாவுக்கு நிச்சயமாக, வித்தியாசமான படமாக இருக்கும் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. படத்தின் சிஜி பணிகள் தற்போது மும்பையில் நடைபெற்று வரும் நிலையில், கங்குவாவில் இருந்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இதில் சூர்யாவுக்கு முக்கிய வில்லனாக சதுரங்க வேட்டை நட்டி நடித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வரும் 23ஆம் தேதி சூர்யா பிறந்த நாளை முன்னிட்டு, கங்குவா திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் காட்சிகள் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.





