நடிகர் தனுஷ் இப்போது ராயன் படத்தை தொடர்ந்து குபேரா படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா தனுஷ்க்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தில் நாகர்ஜூனா முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஆந்திரா, ஐதராபாத், மும்பை உள்ளிட்ட பல பகுதிகளில் நடந்து முடிந்திருக்கிறது.
இந்நிலையில், நடிகர் தனுஷ் இந்தி படம் ஒன்றில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். அதுதவிர இளையராஜா வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கவும் தனுஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கேப்டன் மில்லர் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்த படம் 2 பாகங்களாக உருவாகிறது. இதில் இளையராஜா கேரக்டரில் தனுஷ் நடிக்க உள்ளார்.
கடந்த மாதத்தில் வெளியாகி பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்ற படம் மகராஜா. விஜய் சேதுபதியின் 50வது படம், அவருக்கு பெரிய அளவில் கம்பேக் கொடுத்த படமாகவும் மகாராஜா அமைந்தது. இந்த படத்தை குரங்கு பொம்மை இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கி இருந்தார்.
இந்த படத்தை தொடர்ந்து, இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் ஸ்டார் டைரக்டராக மாறி விட்டார். மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் கொண்டாடும் ஒரு படமாக மகாராஜா படத்தை தந்த அவரை, பல முன்னணி நடிகர்கள் தொடர்பு கொண்டு, தங்களுக்கான ஒரு கதையை உருவாக்கி கதை ரெடி பண்ணுமாறு கூறி வருகின்றனர்.
ஆனால் மகாராஜா படம் வெளிவருவதற்கு முன்பே, நடிகை நயன்தாரா நடிக்கும் கதாநாயகியை மையப்படுத்தி ஒரு கதையை டைரக்ட் செய்ய நித்திலன் சுவாமிநாதன் ஏற்கனவே கமிட் ஆகி இருந்தார். நயன்தாரா நடிக்கும் இந்த படத்துக்கு மகாராணி என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பை இன்னும் நித்திலன் சுவாமிநாதன் துவங்காமல் இருக்கிறார்.
இதற்கு காரணம், டைரக்டர் நித்திலன் சுவாமிநாதனை அழைத்து நடிகர் தனுஷ் பேசியிருக்கிறார். அப்போது நித்திலன் சொன்ன கதை மிகவும் பிடித்துப் போனதால், விரைவில் அந்த படத்தை இணைந்து செய்வோம் என்று தனுஷ் உறுதியாக கூறியிருக்கிறார். மகாராஜா, ராயன் என அவர்களது படங்கள் தொடர்ந்து வெற்றிகளை தந்த படங்கள் என்பதால், தனுஷ் விரைவில் அழைக்கும் பட்சத்தில் அதை அறிவிக்கலாம் என்று, நயன்தாரா படத்தை அதுவரை பெண்டிங்கில் வைத்துவிட்டார் நித்திலன் சுவாமிநாதன்.





