கேரளம் மாநிலத்தில் கடந்த 2 வாரங்களாக ஹேமா கமிட்டி விசாரணை அறிக்கை வெளியானதில் இருந்து பல பாலியல் துன்புறுத்தல் விவகாரங்கள் விஸ்வரூபம் எடுத்து வருகின்றன. பாலியல் சீண்டல்களுக்கு ஆளான பெண் நடிகைகள் பலரும் தங்களது மோசமான கசப்பான அனுபவங்களை ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
கடந்த 2017ம் ஆண்டில் ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் பாலியல் துன்புறுத்தல் விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டு, அந்த கமிட்டி வெளியிட்ட அறிக்கை, பல அதிர்ச்சிக்கரமான உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. 2019ம் ஆண்டிலேயே இந்த விசாரணை அறிக்கை அரசுக்கு சமர்பிக்கப்பட்டு, 5 ஆண்டுகள் தாமதமாக இப்போதுதான் அறிக்கை அம்பலத்துக்கு வந்துள்ளது.
அதன்படி மலையாள சினிமாத்துறையில் படங்களில் நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் இளம் பெண்களும், புதுமுக நடிகைகளும், வளரும் நிலையில் உள்ள இளம் நடிகைகளுக்கு வாய்ப்பு தரவும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர். சில இயக்குனர்கள், சில நடிகர்கள், சில தயாரிப்பாளர்கள் இதுபோன்ற பாலியல் அழுத்தங்களை தருவதும் உறுதியான உண்மைகள் என விசாரணை அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து மலையாள நடிகர் சங்கம் ( அம்மா) மீது எழுந்த புகார்கள் மற்றும் விமர்சனங்களால் சர்ச்சை ஏற்பட்டதால் அதன் தலைவராக இருந்த நடிகர் மோகன்லால் தனது பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து அவரது நிர்வாக கமிட்டியில் இருந்த 16 பேரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ததால், நிர்வாக கமிட்டியே கலைக்கப்பட்டுள்ளது. இதுவும் மலையாள சினிமாத் துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விவகாரம் குறித்து நடிகைகள் ராதிகா, குஷ்பு, ஊர்வசி, நடிகர் விஷால், ஜீவா போன்றவர்கள் கருத்து தெரிவித்த நிலையில் ஆக்ஷன் கிங் நடிகர் அர்ஜூனும் இதுகுறித்து தனது கருத்தை முன்வைத்துள்ளார். அதில் அவர், உலகில் எல்லா இடங்களிலுமே இதுபோன்ற பிரச்னைகள் பெண்களுக்கு இருந்து வருகிறது. அதனால் எல்லா இடங்களில் ஹீரோக்கள் சென்று காப்பாற்ற முடியாது. அனைவருக்கும் பொறுப்புணர்வு இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
மலையாள சினிமாவில் நடிகைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறியிருப்பதே சில பிரபலமான ஹீரோ நடிகர்கள் மீதுதான் என்ற நிலையில், ஹீரோக்கள்தான் நாயகிகளை காப்பாற்றுகின்றனர் என்று அர்ஜூன் கூறியிருப்பதை பலரும் விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன், கருவாட்டுக்கு பூனை காவலா என்ற பழமொழி போல் நடிகர் அர்ஜூன் சொல்லி இருக்கிறார். நடிகைகளை காப்பாற்ற சொல்வதே ஹீரோக்கள் கிட்ட இருந்துதான் சார், என பங்கமாய் அர்ஜூனை கலாய்த்து உள்ளார்.





