நடிகர் விஜய் இப்போது அரசியல்வாதி விஜயாக மாறிவிட்டார். தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக இருக்கும் அவர் கடந்த பிப்ரவரி மாதம் தனது அரசியல் கட்சி பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தொடர்ந்து கடந்த மாதம் 22ம் தேதி தனது கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து கட்சி பாடலையும் வெளியிட்டார்.
இதைத்தொடர்ந்து வருகிற 23ம் தேதி விக்கிரவாண்டியில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டை நடத்த விஜய் ஏற்பாடுகளை செய்து வருகிறார். விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக ஒரு படத்தில் நடிக்க 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நிலையில் இருக்கிறார்.
இனி அவர் அடுத்ததாக நடிக்க உள்ள விஜய் 69 படத்தில் அவரது சம்பளம் 275 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது. இந்தளவுக்கு தமிழ் சினிமாவில் நூற்றுக்கணக்கான கோடிகளை குவிக்கும் நடிகர் விஜய் அரசியல்வாதியாக மாறி இருப்பது ஒருவிதத்தில் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு பெற்றுள்ளது.
ஏனெனில் வழக்கமாக தமிழ் சினிமாவில் மார்க்கெட் இழந்த நடிகர், நடிகைகள் தான் அரசியலுக்கு வருவார்கள். ஏதேனும் ஒரு கட்சியில் ஏதேனும் ஒரு பொறுப்பை வாங்கிக் கொண்டு மேடைகளில் பிரசாரம் செய்து வருமானம் பெறுவார்கள். சிலருக்கு எம்எல்ஏ எம்பி போன்ற பதவிகள் கிடைத்தால் அதை வைத்து 5 ஆண்டுகள் 10 ஆண்டுகள் ஓட்டி விடுவார்கள். ஆனால் நடிகர் விஜய் 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நிலையிலேயே அவர் சினிமாவை விட்டுவிட்டு அரசியலுக்கு வருவது வரவேற்பை பெற்றிருக்கிறது.
இந்நிலையில் நடிகர் விஜய் இன்று ஓணம் பண்டிகைக்கு வாழ்த்துகள் சொல்லி இருக்கிறார். ஆனால் கடந்த தமிழ் புத்தாண்டு மற்றும் விநாயகர் சதுர்த்திக்கு விஜய் வாழ்த்துகள் தெரிவிக்கவில்லை. இதற்கு ஏற்கனவே சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. இன்று ஓணம் பண்டிகைக்கு, மலையாள சொந்தங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த ஓணம் வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்வதாக விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்த வாழ்த்து செய்தி வெளியானதில் இருந்தே விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. மலையாள இந்துக்களின் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லும் விஜய், தமிழகத்தில் இந்து பண்டிகைக்கு வாழ்த்து சொல்லாதது ஏன் என்ற கேள்வி எழுப்பி எழுந்துள்ளது. குறிப்பாக விநாயகர் சதுர்த்திக்கு விஜயிடமிருந்து வாழ்த்து வரவில்லை. தமிழர் புத்தாண்டு, விநாயகர் சதுர்த்திக்கு விஜய் வாழ்த்துகள் தெரிவிக்காமல், ஓணம் பண்டிகைக்கு வாழ்த்துகளை தெரிவித்து இருப்பது அவரது மத பாகுபாட்டை வெளிப்படுத்துவதாக இருக்கிறது என்ற விமர்சனம் எழுந்துள்ளது.





