இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருந்து வருகிறார். இந்தியன் 2 படத்தை தொடர்ந்து தற்போது தெலுங்கு நடிகர் ராம்சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் படத்தை டைரக்ட் செய்து வருகிறார். இந்த படம் டிசம்பர் மாதத்தில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் இந்தி நடிகை கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ளார்.
இயக்குனர் ஷங்கர் நேற்று வெளியிட்ட ஒரு அறிவிப்பில், மதுரை எம்பி சு வெங்கடேசன் எழுதிய வீரயுக நாயகன் வேள்பாரி நாவல் காப்புரிமையை நான் வாங்கி வைத்துள்ளேன். இந்நிலையில் சமீபத்தில் வந்த ஒரு படத்தின் டிரெய்லரில் அந்த நாவலின் சில காட்சிகள் இடம் பெற்றிருந்தது எனக்கு பெரிய அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது.
இப்படி நான் காப்புரிமை பெற்ற வேள்பாரி நாவலில் இருந்து, சில பகுதிகளை திருடி படங்களிலோ, வெப் சிரீயலிலோ யாரும் பயன்படுத்த கூடாது. இனிமேல் அப்படி யாரேனும் பயன்படுத்தினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து இருந்தார். ஆனால், யார் அப்படி பயன்படுத்தினார்கள் என்பது குறித்து தெளிவாக ஷங்கர் விளக்கவில்லை.
சமீபத்தில் சூர்யா நடித்த கங்குவா படத்தின் டிரெய்லர் வெளியானது. அதேபோல் தேவரா என்ற ஜூனியர் என்டிஆர் நடித்த படத்தின் டிரெய்லர் வெளியானது. இயக்குனர் ஷங்கர் குற்றம் சாட்டுவது நடிகர் சூர்யா நடித்த கங்குவா படத்தையா, அல்லது ஜூனியர் என்டிஆர் நடித்த தேவரா படத்தையா என்பதில் குழப்பம் நீடிக்கிறது.
இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவில் சீனியராகவும், அனுபவம் மிக்க இயக்குனராகவும் இருக்கிறார் ஒரு குற்றச்சாட்டை சொல்லும்போது குறிப்பிட்ட படத்தை சொல்லி, அந்த படத்தில்தான் இது போன்ற தவறு நடந்திருக்கிறது என்று எச்சரித்து தெளிவுபடுத்தி இருக்க வேண்டும். இப்படி பொதுவாக கூறியிருப்பதால் பலரும் பலரையும் சந்தேகப்பட வேண்டி உள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மதுரை எம்பி சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவலின் காப்புரிமையை நான்தான் வாங்கி இருக்கிறேன். அந்த வரலாற்று கதையை நான்தான் படமாக்க போகிறேன் என்பதை முதலிலேயே ஷங்கர் அறிவித்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் இதுபோன்ற குழப்பம் ஏற்பட்டிருக்காது. இப்போது அவர் வேள்பாரி கதையில் இருந்து சில காட்சிகளுடன் டிரெய்லரில் வந்த பிறகுதான் அந்த நாவலின் காப்புரிமை தன்னிடம் இருப்பதாக ஷங்கர் வெளிப்படையாக கூறியிருக்கிறார். இதுவரை இதை தெரிவிக்காமல் அவர் இருந்ததே தவறுதான் என்று சர்ச்சை எழுந்துள்ளது.





