இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படம், கடந்த 2023ம் ஆண்டில் மிகப்பெரிய வெற்றி படமாக ரஜினிக்கு அமைந்தது. மீண்டும் ஒரு பாட்ஷா என்று சொல்லும் அளவுக்கு ரஜினி இந்த படத்தில் மாஸான ஒரு வெற்றியைப் பெற்றார் என்றால் அது மிகையல்ல. இந்த படத்தைத் தொடர்ந்து இப்போது ரஜினி நடிப்பில் வருகிற 10ம் தேதி வேட்டையன் படம் ரிலீஸ் ஆகிறது.
ஜெய்பீம் பட இயக்குனர் தசெ ஞானவேல் இயக்கியுள்ள இந்த படத்தில் அமிதாபச்சன் கேமியோ ரோலில் நடித்துள்ளார். இந்த படத்தில் மஞ்சு வாரியார், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். நேற்று மாலை வேட்டையன் டிரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது.
வேட்டையன் படத்தை தொடர்ந்து, சில வாரங்களாக நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருந்தார். கடந்த 30ம் தேதி இரவு திடீரென அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டார்.
டாக்டர்கள் பரிசோதனையில் ரஜினிக்கு, இதயத்தில் இருந்து ரத்தம் வெளியேறிச் செல்லும் ரத்தநாளத்தில் வீக்கம் இருந்ததாகவும் அறுவை சிகிச்சையின்றி அந்த வீக்கத்தை அகற்றும் விதமாக ஸ்டண்ட் வைக்கப்பட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.ரஜினிகாந்த் தற்போது மருத்துவமனையில் டாக்டர்களின் முழு கண்காணிப்பில் உள்ளார். நாளை அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புகிறார்.
இதற்கிடையே நடிகர் ரஜினிகாந்த், இன்னும் சில மாதங்களுக்கு படப்பிடிப்பில் கலந்து கொள்ளக் கூடாது. அப்படியே கலந்து கொண்டாலும் அதிரடி சண்டை காட்சிகள், உடலை அதிகளவில் அசைக்கக்கூடிய நடனக் காட்சிகளில் நடிக்கக்கூடாது எனவும் டாக்டர்கள் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக முழு ஓய்வில் சில மாதங்கள் இருப்பதே நல்லது என்றும் டாக்டர்கள் கூறியிருக்கின்றனர்.
அதிரடி ஆக்சன் படங்களுக்கு பெயர் பெற்ற லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் ரஜினி நடிக்க வேண்டிய சண்டைக் காட்சிகளும், நடன காட்சிகளும் நிறைய இருப்பதால் கூலி படத்தில் ரஜினி நடிப்பதே கேள்விக்குறியாக இப்போது மாறி உள்ளது. ரஜினிக்காக கூலி படத்தின் படப்பிடிப்பை இன்னும் சில மாதங்களுக்கு தள்ளி வைத்துவிட்டு அதன்பிறகு லோகேஷ் கனகராஜ் ரஜினியை இயக்குவாரா அல்லது சண்டைக் காட்சிகள் இல்லாத வகையில் கூலி படத்தின் கதையை மாற்றியமைப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனினும் இன்னும் சில மாதங்களுக்கு ரஜினிகாந்த் படப்பிடிப்பில் பங்கேற்க மாட்டார் என்ற உறுதியான தகவல் பரவி வருகிறது.





