நடிகர் விஜய் நடிப்பில் கடந்த செப்டம்பர் 5ம் தேதி தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படம் வெளியானது. இந்த படம் 455 கோடி ரூபாய் வசூலித்த நிலையில், விமர்சன ரீதியாக தோல்வியடைந்தாலும், வியாபார ரீதியாக இது மிகப்பெரிய வெற்றிதான். இதையடுத்து நடிகர் விஜய் தற்போது தளபதி 69 என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையே விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள விசாலை என்னும் கிராமத்தில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் அரசியல் மாநில மாநாடு வருகிற 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்த மாநாட்டில் பங்கேற்கும் நடிகர் விஜய், தனது அரசியல் எதிர்கால திட்டங்கள், கொள்கைகள், கோட்பாடுகள், கட்சியின் செயல்பாடுகள் குறித்து மாநாட்டில் அறிவிக்க இருக்கிறார். அதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் இந்த மாநாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
தற்போது ஆளுங்கட்சியாக திமுக உள்ள நிலையில் வருகிற 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் முதல்வர் பதவிதான் தனது இலக்கு என்ற லட்சியத்துடன் நடிகர் விஜய் தற்போது அரசியல் களத்தில் குதித்து இருக்கிறார். அதனால் இந்த மாநில மாநாடு வெற்றிக்கரமாக நடப்பது மட்டுமின்றி, அவரது கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகளை மக்களுக்கு அறிவிக்க இருக்கிறார்.
இந்நிலையில் மாநாடு நடக்கும் பகுதியில் சுமார் 300 பேர் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மாநாட்டின் பந்தலின் முகப்பில் செயின் ஜார்ஜ் கோட்டை அமைக்கப்பட உள்ளது. மேலும் உள்ளே மாநாடு பகுதியில் இரு புறங்களிலும் தஞ்சாவூர் கோவில், ராஜராஜ சோழன் கால சிற்பங்கள், தமிழ்நாட்டின் தொன்மை வாய்ந்த சிலைகள், சிற்பங்கள், முக்கிய இடங்கள், கலைபடைப்புகள் போன்றவை அலங்காரமாக வைக்கப்பட இருக்கின்றன.
மேலும் 200க்கு 50 என்ற பரப்பளவில் பிரமாண்டமான மேடை அமைக்கப்படுகிறது. 100 முதல் 120 பேர் வரை வரை சிறப்பு விருந்தினர்கள் மேடையில் அமரலாம். மாநாட்டு பந்தலில் 1.5 லட்சம் பேர் அமரும் வகையில் இருக்கை வசதிகள் செய்யப்பட உள்ளது. தற்போது தொடர் மழை பெய்து வருவதால், வருகிறது 27ம் தேதி மழை பெய்தாலும் மாநாடு பாதிக்காத வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜயின் அப்பா, இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகரிடம் விஜய் நடத்தப்போகும் அரசியல் மாநாடு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அப்போது அருகில் டைரக்டர் வெங்கட் பிரபு இருந்தார். அப்போது மாநாடு குறித்து கூறுங்கள் என்ற செய்தியாளர் கேட்டதுக்கு, மாநாடு படம் எடுத்த இயக்குனர் இருக்கிறார். அவரிடம் கேளுங்கள் என்று எஸ்ஏ சந்திரசேகர் வெங்கட்பிரபுவை சுட்டிக் காட்டி கூறினார். மீண்டும் நிருபர்கள், விஜய் நடத்தும் மாநாடு பற்றி கூறுங்கள் என்றனர். அப்போதும், மாநாடு படம் எடுத்த இயக்குனர் வெங்கட் பிரபு இருக்கிறார். அவரிடமே கேளுங்கள் என்று அவரை கைகாட்டி விட்டு நகர்ந்து சென்று விட்டார். இது விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.





