நடிகர் பிரபுதேவா மிகச்சிறந்த நடனக் கலைஞர். அவர் சினிமாவில் முதலில் பாடல்களில் நடனக் கலைஞராக தான் அறிமுகமானார். அக்னி நட்சத்திரம், ஜெண்டில்மேன், சூரியன், வால்டர் வெற்றிவேல், பிரதாப் போன்ற படங்களில் நடனத்தில் அசத்தி, ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
பிறகு ஷங்கர் இயக்கத்தில் காதலன் படம், அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்து வெற்றி நாயகனாக வந்த பிரபுதேவா போக்கிரி, வில்லு போன்ற விஜய் படங்களை இயக்கினார். இந்தியில் ரவுடி ரத்தோர் படத்தை இயக்கியதும் பிரபுதேவா தான்.
நடன இயக்குநர், நடிகர், இயக்குநர் என்று தமிழ் சினிமாவில் முன்னணியில் உள்ள பிரபுதேவா, இப்போது விஜய் 68 படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் நடன கலைஞராக மட்டுமின்றி, படத்தில் முக்கிய கேரக்டரிலும் பிரபுதேவா நடிக்கிறார். இந்த படத்தில் மோகன், பிரசாந்த், சிநேகா, யோகிபாபு, விடிவி கணேஷ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
சார்லி சாப்ளின், சார்லி சாப்ளின் 2 படங்களை இயக்கிய இயக்குநர் ஷக்தி சிதம்பரம் இயக்கிய இன்னும் பெயர் வைக்காத ஒரு படத்தில் பிரபுதேவா நடித்திருக்கிறார். இந்த படத்தில் மடோனா செபாஸ்டியன், யாஷிகா ஆனந்த், அபிராமி, யோகிபாபு, ஒய்ஜி மகேந்திரன், ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
இந்த படம் குறித்து, இயக்குநர் ஷக்தி சிதம்பரம் கூறுகையில் ஏற்கனவே நான் சார்லி சாப்ளின் படங்களில் பிரபுதேவா நடித்திருக்கிறார். ஆனால், இந்த படத்தில் மிக வித்யாசமான ஒரு கேரக்டரில் பிரபு தேவா மிகச் சிறந்த நடிப்பை தந்திருக்கிறார். படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, போஸ்ட் புரடக்சன் பணிகள் நடந்து வருகிறது.
இந்த படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. மக்களே படத்துக்கு பெயர் வைப்பார்கள். அடுத்த மாதம், டிசம்பரில் படத்தின் பெயர் அறிவிக்கப்படும். இந்த படத்தில் பிரபுதேவா 90 நிமிடங்கள் பிணமாக நடித்திருக்கிறார். பல முக்கியமான காட்சிகளில், குளோசப் சாட்களில் அவர் மூச்சு விடாமல் நடித்தார். இதற்கு முன், மகளிர் மட்டும் படத்தில் நாகேஷ் அப்படி ஒரு கேரக்டரில் 15 நிமிடங்கள் நடித்திருந்தார். இந்த கதையை எழுத எனக்கு 3 ஆண்டுகள் ஆனது, என்று கூறி இருக்கிறார் இயக்குநர் ஷக்தி சிதம்பரம்.





