நாளைய இயக்குனர் நிகழ்ச்சியின் மூலம் பல குறும்படங்களை இயக்கி பாராட்டைப் பெற்றவர் கார்த்திக் சுப்புராஜ். அதில் தனது ஒரு குறும்படத்தையே முழு நீள திரைப்படமாக எடுத்து பீட்சா படத்தை வெளியிட்டு ஒட்டுமொத்த தமிழ் திரை உலகையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.
இதனைத் தொடர்ந்து அவரது இரண்டாவது திரைப்படமாக ஜிகர்தண்டா அமைந்தது. மதுரையை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்ட அப்படி ஒரு கேங்ஸ்டர் திரைப்படத்தை அதற்கு முன்பு யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். வித்தியாசமான கதைகளத்தில் தனக்கே உண்டான இயக்கத்தின் நுட்பங்களை மிகத் தெளிவாக கூறி சபாஷ் போட வைத்தார் கார்த்திக் சுப்பராஜ்.
இதன் பிறகு அவர் இயக்கத்தில் வெளிவந்த ஒவ்வொரு திரைப்படங்களும் ரசிகர்களின் கண்ணோட்டத்தில் ஒரு புதிய பார்வையை பெற்றது. இறைவி திரைப்படம் பெரிய அளவில் ஓடவில்லை என்றாலும், அதன் கிளைமாக்ஸ் இன்றுவரை பேசப்படும் பொருளாகவே உள்ளது.
ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான கார்த்திக் சுப்புராஜ் அவரை வைத்து பேட்ட திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படத்தின் முதல் பாதியே கூறிவிடும் அவர் ரஜினி மீது எந்த அளவு பிரியம் வைத்திருக்கிறார் என்று. காட்சிக்கு காட்சி மாஸ் சீன்களை வைத்து அசத்தியிருப்பார் கார்த்திக் சுப்புராஜ்.
அண்மையில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி கொடுத்தது. தற்போது அவர் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை எடுத்து முடித்து இருக்கிறார். இது அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் தான் கடந்து வந்த திரைப்படங்கள் குறித்தும் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
அதில், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மற்றும் மகான் என இரண்டு திரைப்படத்தையும் ரஜினி சாரை மனதில் வைத்து தான் எழுதினேன். இது தொடர்பான ஐடியாவையும் அவரிடம் கூறினேன். ஆனால் அது அப்போது ஒர்க் அவுட் ஆகவில்லை. ஆனால் படம் வெளியான பிறகு ஏன் இந்த கதையை என்னிடம் கூறவில்லை என்று ரஜினி சார் என்னிடம் கேட்டிருக்கிறார். சார் இதற்கான ஐடியாவை தான் உங்களிடம் தெரிவித்தேன் என்று கூறியிருந்தேன் என இயக்குனர் பேசியிருக்கிறார்.





