இளம் நடிகர் கவின் தற்போது திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதே போல் மூத்த நடிகை நயன்தாராவும், மீண்டும் ஒரு வெற்றி திரைப்படத்தை கொடுத்து தனக்கான இடத்தை தக்க வைக்க போராடி வருகிறார். அண்மைக்காலமாக அவர் நடிப்பில் வெளியான எந்த திரைப்படங்களும் பெரிய அளவில் வெற்றி பெறவே இல்லை.
கடந்த ஆண்டு நயன்தாரா ஹீரோயினாக நடித்த இறைவன் திரைப்படம் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது. இதே போல் தனது 75 ஆவது திரைப்படமாக அன்னபூரணியில் அவர் நடித்தார். ஆனால் படமும் ஓடவில்லை அதற்கு ஏற்ற விமர்சனங்களும் கிடைக்கவில்லை.
இதற்கு பதிலாக அன்னபூரணி திரைப்படம் பெரும் சர்ச்சையில் சிக்கியது. அது ஓ டி டி தளத்தில் வெளியாகும் போது, படத்தில் பிராமண சமூகத்தை இழிவுபடுத்தி இருப்பதாக மகாராஷ்டிராவில் புகார் அளிக்கப்பட்டது. இதற்கு சம்பந்தப்பட்ட ஓ டி டி நிறுவனம் வருத்தம் தெரிவித்தது. இருப்பினும் பிரச்சனை பூதாகரமாக வெடித்துக் கொண்டிருக்க, மன்னிப்பு கேட்டார் நயன்தாரா.
இது ஒரு பக்கம் இருக்க தனக்கு லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டாம் என்றும் அண்மையில் அவர் அறிவித்தார். தற்போது அவர் மண்ணாங்கட்டி என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர் விக்கி இயக்கும் இந்த திரைப்படத்தில், யோகி பாபுவுக்கு ஒரு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இதே போல் டெஸ்ட் என்னும் திரைப்படத்திலும் கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். இதனிடையே யாரும் எதிர்பார்க்காத வகையில் கவினுக்கு நயன்தாரா ஜோடியாக நடித்து வருகிறார். பாடலாசிரியர் விஷ்ணு எடவன் தான் இந்த திரைப்படத்தின் இயக்குனர். இதில் வயதில் மூத்த பெண்ணை ஹீரோ காதலிப்பது தான் கதை என்று கூறப்பட்டது.
ஆனால் தற்போது அது கதைக்களம் இல்லை என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. காதல் கலந்த குடும்பத் திரைப்படமாக இது இருக்கும் என்று கூறி வருகிறார்கள். இந்நிலையில் படத்திற்கு ஹாய் என தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதனை கேள்விப்பட்ட பலரும் இப்படி ஒரு தலைப்பா என்று ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.





