அமரன் திரைப்படத்தின் மூலம் தனது திரையுலக பயணத்தில் மிகப்பெரிய பாய்ச்சலை ஏற்படுத்தி இருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் பச்சைக்கொடி காட்டி இருக்கிறார்கள். இந்த திரைப்படத்தில் தனது நடிப்பின் மூலமும் அடுத்த பரிமாணத்திற்கு சென்றிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
முதல் பாதி முழுவதும் காதல் ஆக்சன் நிறைந்த காட்சிகளாகவும் இரண்டாம் பாதியில் ஆக்சனுக்கு முக்கியத்துவம் கொடுத்தும் எடுக்கப்பட்டிருக்கிறது இந்த அமரன் திரைப்படம். ரங்கூன் திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியின் படைப்புதான் இது.
விக்ரம் திரைப்படத்திற்குப் பிறகு ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் வசூலைக் குவித்து வருகிறது. கடந்த 31 ஆம் தேதி அதாவது தீபாவளிக்கு வெளியான இந்த திரைப்படம் வார இறுதிவரை அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடி, தயாரிப்பு நிறுவனத்திற்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.
ஏற்கனவே இந்த திரைப்படத்தை பார்த்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் பட குழுவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அவரது மகனும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தான் இந்த திரைப்படத்தை வெளியிட்டு இருக்கிறது. அமரன் திரைப்படம் வெற்றி பெறுவதற்கு மற்றொரு காரணம் அதில் சாய் பல்லவியின் நடிப்பு தான்.
இந்து ரபேகா வர்கீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அவர், பலரது பாராட்டையும் பெற்றிருக்கிறார். சொல்லப்போனால் பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரம் மூலம் பெறும் பட்டாளத்தை சேர்த்த சாய் பல்லவி, மீண்டும் தான் ஒரு சிறந்த நடிகை என்பதை இந்த திரைப்படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார்.
வெறும் மூன்று நாட்களில் இந்த திரைப்படம் 100 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் குவித்து இருக்கிறது. இதற்கு முன்னதாக சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் 12 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் ஈட்டியது. இதே சாதனையை எடுத்துக்கொள்ள டாக்டர் திரைப்படத்திற்கு 25 நாட்கள் ஆனது. ஆனால் அதையெல்லாம் அமரன் தவிடு பொடி ஆக்கி உள்ளது. இதனால் படக்குழுவும் சிவகார்த்திகேயனும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்களாம். நாளை அதாவது திங்கட்கிழமை அமரன் படத்தின் சக்சஸ் மீட் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.





