மதுரையைச் சேர்ந்த அட்லி, ஆரம்ப காலத்தில் குறும்படங்களை இயக்கி வந்தார். சிவகார்த்திகேயன் அப்போது அது இது எது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய போது, அவரை வைத்து முகப்புத்தகம் என்னும் குறும்படத்தை இயக்கினார். இந்தப் படம் இணையத்தில் வைரலாக, இயக்குனர் ஷங்கரின் பார்வைக்கும் சென்றது.
இதன்மூலம் அவருக்கு உதவி இயக்குனராக சேர்ந்த அட்லி, எந்திரன் மற்றும் நண்பன் ஆகிய திரைப்படங்களில் பணியாற்றினார். இதன் பிறகு ராஜா ராணி திரைப்படம் அவரை தரமான இயக்குனர் எனும் அந்தஸ்துக்கு உயர்த்தியது. இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் தயாரிப்பில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து, விஜயுடன் இணைந்த அவர் தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று வெற்றி திரைப்படங்களை கொடுத்தார். தற்போது தமிழ் திரையுலகில் இருந்து இந்தி திரையுலகத்திற்கு சென்றிருக்கும் அவர், ஷாருக்கானை வைத்து ஜவான் என்னும் படத்தை கொடுத்திருக்கிறார்.
தமிழ் ரசிகர்களுக்கு இது பழக்கப்பட்ட கதையாக இருந்தாலும், பாலிவுட்டிற்கு மிக மிக புதியதாக இருந்ததால் அங்கு பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. கடந்த ஏழாம் தேதி வெளியான இந்த திரைப்படம், இதுவரை 937 கோடி ரூபாய் அளவிற்கு வசூல் செய்துள்ளது. விரைவில் ஆயிரம் கோடி ரூபாயையும் அது ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படி அட்லியின் சாதனைகள் ஒரு பக்கம் இருந்தாலும், ஒரு காப்பி இயக்குனர் என்ற குற்றச்சாட்டு மட்டும் நீண்ட நாட்களாக அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது. ராஜா ராணியில் தொடங்கி இப்போது இயக்கி இருக்கும் ஜவான் படம் வரை, அனைத்துமே பிற காட்சிகளின் சாயல்தான் என பலரும் கூறி வருகின்றனர்.
மௌனராகம் தான் ராஜா ராணி, சத்ரியன் திரைப்படம்தான் தெறி, அபூர்வ சகோதர்களே மெர்சல் என்று பலர் ஆதாரத்துடன் கூறினாலும், அதனை இயக்குனர் அட்லி காதில் வாங்கிக் கொள்வதே இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக அவர் எடுத்து ஜவான் திரைப்படம், கிட்டத்தட்ட 20 திரைப்படங்களின் சாயல்கள் உள்ளது என ரசிகர்கள் குமுறினர்.
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்திருக்கும் அவர், மற்ற இயக்குனர்களிடமிருந்து தான் எப்படி வேறுபடுகிறேன் என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார். இது பற்றி அவர் பேசியதாவது, “நான் மிகப்பெரிய நட்சத்திரங்களை வைத்து, வணிக ரீதியிலான படத்தைக் கொடுக்கும் பாணியில் செயல்பட்டு வருகிறேன். இதுதான் என்னை விமர்சனங்களை எதிர்கொள்ள வழி வகுக்கிறது. மற்ற இயக்குனர்கள் சினிமாவில் வித்தியாசமான களத்தை எதிர்கொள்கிறார்கள். ஆனால் நான் திரையரங்குகளுக்கு வரும் ஆடியன்ஸ்களை எண்டர்டெயின் பண்ண வேண்டும் என்றே விரும்புகிறேன். இதுதான் என் வெற்றிக்கும் வழி வகுக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.





