தமிழ் சினிமா தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக கொடிகட்டி பறப்பவர் சீயான் விக்ரம். தனது அசாத்திய நடிப்பின் மூலம், கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றிருக்கும் விக்ரம், ஏராளமான வெற்றி திரைப்படங்களை குவித்திருக்கிறார். ஒவ்வொரு திரைப்படத்திற்கும் அதன் கதைக்கு ஏற்றவாறு தன்னை உருமாற்றிக் கொள்ளும் விக்ரம், அதற்காக பாராட்டையும் பெற்று பல்வேறு விருதுகளையும் வாங்கி குவித்திருக்கிறார்.
ஆனால் அண்மைக்காலமாகவே விக்ரம் ஒரு மிகப்பெரிய வெற்றி கொடுப்பதற்காக போராடி வருகிறார். இருமுகன் சாமி ஸ்கொயர் கோப்ரா என விக்ரம் தொட்ட அதனை திரைப்படங்களும் படுதோல்வியை சந்தித்ததால், அப்செட்டில் இருந்த நடிகர், தங்கலான் திரைப்படத்தின் மூலம் இயக்குனர் பா ரஞ்சித்தை பெரிதும் நம்பி இருந்தார்.
ஆனால் இந்த திரைப்படமும் இங்கு பெரிய வெற்றியைப் பெறவில்லை என்பதுதான் சோகம். திரைக்கதையில் சுவாரசியம் இல்லாததாலும், வசனங்கள் சுத்தமாக புரியாததாலும் தங்கலான் திரைப்படம் ரசிகர்களை ஈர்க்கத் தவறியது. குறிப்பாக படத்தின் இரண்டாம் பாதி நன்றாகவே இல்லை என்று ரசிகர்கள் கூறி வந்தனர்.
ஆனால் அதே சமயம் தயாரிப்பு நிறுவனம் தரப்பிலிருந்து தங்கலான் திரைப்படம் வெற்றி எனக் கூறப்பட்டது. படம் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் ஈட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது அடுத்த அடுத்த திரைப்படங்களில் விக்ரம் கவனம் செலுத்தி வருகிறார். இதில் முதலாவதாக அவர் வீர தீர சூரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
அண்மையில் சித்தா திரைப்படத்தை கொடுத்து பலரது கவனத்தையும் ஈர்த்த அருண்குமார் தான் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். ஒரே இரவில் நடைபெறும் கதையாக இது எடுக்கப்பட்டிருக்கிறது. துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்க, வில்லனாக வந்து மிரட்டுகிறார் எஸ் ஜே சூர்யா.
இதனைத் தொடர்ந்து பார்க்கிங் திரைப்படத்தின் இயக்குனருடன் கைகோர்க்க திட்டமிட்டு இருக்கிறார் விக்ரம். அதேபோல் மண்டேலா மாவீரன் படங்களை எடுத்த மடோனா அஸ்வின் உடனும் விக்ரம் சேர இருக்கிறார். இதன் நடுவே விடா முயற்சி திரைப்படத்தின் இயக்குனர் மகிழ்திருமேனியும் விக்ரமிடம் ஒரு கதை கூறியிருக்கிறாராம். இது நடிகருக்கு மிகவும் பிடித்து போய்விட்டதாம். இதனால் இவர்கள் இருவரும் விரைவில் இணைவார்கள் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.





