நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டில் வெளியான புஷ்பா படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதைத்தொடர்ந்து அந்த படத்தின் 2ம் பாகம் வருகிற டிசம்பர் 5ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகிறது. சென்னையில் நேற்று நடந்த புஷ்பா 2 படத்தின் பிரமோ நிகழ்ச்சியில் நடிகர் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, இயக்குனர் நெல்சன், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்டோர் காணப்பட்டனர்.
இந்த விழாவில் நடிகர் அல்லு அர்ஜூன் பேசியதாவது, நான் பிறந்த இந்த மண்ணுக்கு அன்போடு வணக்கம். என் தமிழ் மக்களே வணக்கம். சென்னை மக்களே வணக்கம். இந்த நாள் என்னால் மறக்க முடியாத நாள்.எத்தனையோ ஆண்டுகளாக இதற்காக எதிர்பார்த்து காத்திருந்தேன். நன்றி. நான் 20 ஆண்டுகளாக பணி செய்கிறேன்.
புஷ்பா படத்துக்காக நிறைய மாநிலங்களுக்கு போனேன். புஷ்பா பட பிரமோசனுக்காக வெளிநாடுகளும் போனேன். ஆனால் எங்கே போனாலும் சென்னைக்கு நான் வரும்போது அந்த பீலிங்கே வேற. இதை நிஜமா சொல்றேன். நாம எங்கிருந்து வந்தோம், அந்த நினைவுகளை எனக்கு ஞாபகப்படுத்துவது சென்னைதான்.
சென்னை ஏர்போர்ட்டுக்கு வந்தாலே அந்த எமோஷனல் எனக்கு வந்துவிடும். ஆரம்பத்தில் என்னுடைய 20 ஆண்டு வாழ்க்கை, நான் சென்னையில்தான் இருந்தேன். அதனால் நான் என்ன சாதித்தாலும், சாதனைகளை செய்தாலும் அதை சென்னைக்கு நான் சமர்ப்பணம் செய்கிறேன். நான் தமிழ் கலாசாரத்தில் பழகியவன், அந்த வாழ்க்கையில் ஊறியவன். அதனால் நான் எங்கே போனாலும் பக்காவான சென்னை தி நகர் பையன்தான்.
மைக்கில் பேசும்போது அப்பப்போ தமிழை மறந்துடுவேன். ஆனால் பிரண்ட்ஸ் கூட உட்காரும்போது, டேய் மச்சான் என்னடா மச்சான் ரொம்ப ஓவரா பண்றான் என்றுதான் பேசுவேன். நான் நேஷனல் போனாலும், இன்டர்நேஷனல் போனாலும் ஒரு சென்னை பையன்தான் என்பதை மறந்து விடாதீர்கள் என்று பேசியிருக்கிறார்.
இதுவரை தெலுங்கு மொழி படங்களில் அல்லு அர்ஜூன் அதிகமாக நடித்த நிலையில், புஷ்பா 2 பட விழாவில் அல்லு அர்ஜூன் தமிழில் பேசியதை கேட்டு ரசிகர்கள் ஆச்சரியத்தில் மூழ்கி விட்டனர். அந்தளவுக்கு தமிழில் மிக சரளமாக, அழகாக அல்லு அர்ஜூன் பேசினார். அதனால் மேடையில் பேசிய இயக்குனர் நெல்சன் திலீப்குமார், நேரடியான தமிழ் படத்தில் அல்லு அர்ஜூன் நடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.





