தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் என அழைக்கப்படுபவர் அர்ஜூன். அவரது படங்களில் அதிரடி சண்டை காட்சிகளில் டூப் போடாமல் பலமுறை நடித்திருக்கிறார் அர்ஜூன். ஆங்கில படங்களை போல தனது படங்களில் சண்டை காட்சிகள் இருக்க வேண்டும் என்று விரும்புவர் அர்ஜூன். அதனால் அவரது படங்களில் சண்டை காட்சிகள் மிக சிறப்பாக இருக்கும்.
அர்ஜூன் நடித்த பல படங்கள் பெரிய வெற்றிப் படங்களாக இருந்திருக்கின்றன. ஜெண்டில் மேன், முதல்வன், ஜெய்ஹிந்த், ஆயுத பூஜை, சின்னா, இரும்புத்திரை, மங்காத்தா, கிரி, ஏழுமலை, மருதமலை, வேதம், ரிதம் என பல படங்களை சொல்லலாம். துவக்கத்தில் ஹீரோவாக மட்டுமே நடித்த அர்ஜூன் சமீபகாலமாக வில்லன் கேரக்டரிலும் நடித்து ரசிகர்களை அசத்தி வருகிறார்.
அஜீத்குமாருடன் மங்காத்தா, விஜயுடன் லியோ ஆகிய படங்களில் வில்லனாக நடித்த அர்ஜூன் மீண்டும் அஜீத்குமாருடன் விடாமுயற்சி படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக, குணச்சித்திர நடிகராக வலம் வரும் தம்பி ராமையா, அர்ஜூனின் சம்பந்தியாவார். சமீபத்தில்தான் தம்பி ராமையா மகன் உமாபதிக்கும், அர்ஜூன் மகள் ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் நடந்தது.
நடிகர் அர்ஜூன் நடித்த பல படங்களில் அவருடன் நடிகர் கவுண்டமணி நடித்திருக்கிறார். குறிப்பாக ஜெண்டில்மேன், ஜெய்ஹிந்த், ஆயுதபூஜை போன்ற சில படங்களில் அர்ஜூன், கவுண்டமணி காம்பினேஷனில் காமெடி நன்றாக இருக்கும். அர்ஜூன் சொந்தமாக தயாரித்த, இயக்கிய படங்களில் தனக்கு மிகவும் பிடித்த நடிகர் கவுண்டமணிக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.
அதே போல் நடிகர் வடிவேலுவும் நடிகர் அர்ஜூனுடன் சில படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக கிரி படத்தில் இடம்பெற்ற பேக்கரி காமெடி பெரிய அளவில் டிரண்டிங் ஆனது. அதே போல் மருதமலை படத்தில் ஏட்டு ஏகாம்பரம் கேரக்டரில் நடித்த வடிவேலு, அர்ஜூன் காமெடி காம்பினேஷன் பெரிய சக்சஸ் ஆனது.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் அர்ஜூன் கூறுகையில், ஜெண்டில்மேன் படத்தை நான்தான் டைரக்ட் செய்தேன். அதில் வரும் காமெடி காட்சிகளையும் நானே எழுதினேன். ஷூட்டிங்கில் அவர் பேசும் டைமிங் காமெடி டயலாக் கேட்டு நான் திரும்பி நின்று சிரித்து விடுவேன். என்னை கண்ட்ரோல் பண்ண முடியாது. அதே போல் வடிவேலுவுடன் நடிக்கும் காட்சிகளிலும் என்னால் சிரிப்பை அடக்க முடியாது. அதனால் இவர்கள் 2 பேருடன் நடிக்க வேண்டிய காட்சிகளில் நான் மிகவும் சிரமப்பட்டிருக்கிறேன், என்று நடிகர் அர்ஜூன் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.





