தமிழ் சினிமாவில் 74 வயதிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஹீரோவாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவர் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் அவர் நடிக்கும் படங்களின் ஸ்டில்கள் வெளியாகி பெரிய அளவில் ரசிகர்களுக்கு மத்தியில் வரவேற்பு பெறும். ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படங்களை அவரது ரசிகர்கள் எப்போதுமே தங்களது சட்டைப்பையில் வைத்துக் கொள்வது அப்போது வழக்கம்.
ரஜினியின் ஸ்டைலான ஸ்டில்களுக்கு எப்போதுமே ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு இருக்கிறது. இதுபோன்று நடிகர்களின் ஸ்டில்ஸ் எடுப்பதில் மிகவும் திறமை வாய்ந்தவர் ஸ்டில்ஸ் ரவி. ரஜினி கமல் விஜயகாந்த் என ஸ்டில்ஸ் ரவி எடுத்த பல நூற்றுக்கணக்கான ஸ்டில்கள் இப்போதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்துடன் தனக்கு ஏற்பட்ட ஒரு கசப்பான அனுபவத்தை சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய பிரபல புகைப்பட கலைஞர் ஸ்டில்ஸ் ரவி வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
இதுகுறித்து ஸ்டில்ஸ் ரவி கூறியதாவது, ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்த முதல் படம் பைரவி படத்திலிருந்து நான் அவருடன் வேலை செய்து வருகிறேன். அப்பவே அவர் மிகவும் ஆர்வத்தோடு வேலை செய்வார். அன்பாக என்னிடம் பழகுவார். நீண்ட நாட்களுக்கு பிறகு சிவா என்ற படத்தில் ரஜினியுடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதெல்லாம் முதல் நாள் ஷூட்டிங்கில் எடுக்கப்படும் புகைப்படங்களைக் கொண்டுதான் அந்த படத்திற்கான பப்ளிசிட்டி வேலைகள் தொடங்கும் .
அதனால் அவரிடம் நான் போட்டோ எடுக்க அனுமதி கேட்டேன். இப்போது உள்ள வசதிகள் எல்லாம் அப்போது கிடையாது. கேமராவை பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டும். அப்படி நான் கேமராவை அதற்குரிய ஸ்டாண்டில் வைத்து ஸ்டெடியாக பிடித்துக் கொண்டு ரஜினியிடம் போட்டோ போஸ் கேட்டேன். இந்த சம்பவம் நடந்தபோது மாலை 5.30 மணி இருக்கும். உடனே ரஜினிகாந்த் என்னை தாறுமாறாக திட்டிவிட்டார். நீங்களும் இப்பவே போட்டோ எடுக்கணுமா என்று கோபத்தோடு கேட்டார்.
நான் அப்போதே முடிவு பண்ணிட்டேன். இனிமே இந்த படத்தில் ஒர்க் பண்ணக்கூடாது என்று கிளம்பிவிட்டேன். என்னுடைய உதவியாளர் ஒருவர் என்னை கூப்பிட மேல் மாடியிலிருந்து ஓடி வந்தார். ரஜினி சார் உங்களை வரச் சொல்கிறார் என்று சொன்னார். நான் ரஜினியை மீண்டும் சந்தித்தபோது, என்ன ரவி கோவிச்சுக்கிட்டீங்களா என்று ரஜினி கேட்டார். நான் அவரிடம் ரஜினி நீங்கள் ஏதோ வித்தியாசமாக செய்துதான் இந்த இடத்துக்கு வந்திருக்கிறீர்கள். நானும் வித்தியாசமாக செய்யணும் என்று நினைக்கிறேன்.
அதற்கு உங்களுடைய ஒத்துழைப்பு தேவை. என்னை தனிப்பட்ட முறையில் திட்டினால் சென்றிருக்க மாட்டேன். நான் வேலை செய்யும் போது என்னை திட்டியதால் எனக்கு மனக்கசப்பு ஏற்பட்டுவிட்டது என்று சொன்னேன். அங்கு வந்த இயக்குனர், சார் 5 மணி ஆகிவிட்டாலே ட்ரிங்க்ஸ் மூடுக்கு ரஜினி போய்விடுவார். அதனால் அவர் டென்ஷனில் இருப்பார் என்றசர். ரஜினி சாரும் என்னிடம் சாரி என்று சொன்னார். ரஜினி இருந்த உயரத்திற்கு என்னை திரும்ப கூப்பிட்டு சாரி கேட்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் அவர் அப்படி இருந்ததால்தான் இப்போது இவ்வளவு உயரத்துக்கு சென்றிருக்கிறார் என்று ஸ்டில் ரவி கூறியிருக்கிறார்.





