தற்போது சினிமாவில் பான் இந்தியா திரைப்படங்களுக்கு மவுசு கூடி விட்டது. பெரிய பெரிய நட்சத்திரங்களை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள், அதை அந்த மொழியில் மட்டுமல்லாமல், வேறு மொழியிலும் எடுத்து அதன் மூலம் வருவாய் ஈட்டி வருகின்றனர். இந்த படங்கள் சில சமயங்களில் அசுர வசூலை பெறுகின்றன.
உதாரணத்திற்கு பாகுபலி படத்தின் ஒன்றாவது மற்றும் இரண்டாவது பாகத்தை கூறலாம். அதற்கு முன்பு பிரபாஸ், தமிழ் சினிமாவில் அந்த அளவு பெயர் பெற்ற நடிகர் கிடையாது. ஆனால் பாகுபலி திரைப்படத்தின் திரைக்கதையும், சொல்லப்பட்ட விதமும் மிக அருமையாக இருந்ததால் அது தமிழ்நாட்டிலும் கொண்டாடப்பட்டது.
இதேபோல் நாம் கே ஜி எஃப் திரைப்படத்தைக் கூறலாம். அதன் இரண்டு பாகங்களும், இந்தியாவைத் தாண்டி உலகம் முழுவதும் கவனம் பெற்றன. இந்த படங்கள் எல்லாம் ஆக்சன் காட்சிகளை மையமாக வைத்தே எடுக்கப்பட்டிருந்தன. இந்த வரிசையில் முக்கியமாக இடம் பெற்றிருக்கும் திரைப்படம் புஷ்பா.
அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடித்திருந்த இந்த திரைப்படத்தை, சுகுமார் இயக்கி இருந்தார். செம்மர கடத்தலை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது. இதன் முதல் பாகத்தில், ஒரு சாதாரண இளைஞன் கடத்தல் எப்படி பணக்காரன் ஆகிறான் என்பதை அது பேசி இருக்கும்.
அதுபோக அல்லு அர்ஜுனின் உடல் மொழியும், அவரது வசன உச்சரிப்பும், புஷ்பானா பிளவர் இல்லடா ஃபயர் என தாடியை தேய்த்து கொண்டு அவர் கூறும் விதமும் படத்தில் கொண்டாடப்பட்டது. இதன் காரணமாக அதன் இரண்டாம் பாகம் சூட்டிங் தொடங்கும் போதே, அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வந்தது. இப்படியான சூழலில் தான், படம் ரிலீஸ் ஆகி வரவேற்பை பெற்று வருகிறது.
குறிப்பாக முதல் பாதி அட்டகாசமாக இருப்பதாக பலரும் கூறி வருகிறார்கள். ஒட்டுமொத்த கதையையும், அல்லு அர்ஜுன் தாங்கி பிடித்திருப்பதாகவும், நடிப்பால் மாஸ் காட்டி இருப்பதாகவும் விமர்சனங்கள் வெளிவந்துள்ளன. ஆனால் இரண்டாம் பாதியில் கடைசி ஒரு மணி நேரம் போகும் போக்கே தெரியவில்லை என்று சிலர் கூறுகிறார்கள். மூன்றாம் பாகம் வேண்டும் என்பதற்காகவே இப்படி செய்யப்பட்டதா என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க, வெறும் முன்பதிவில் மட்டுமே புஷ்பா 2 திரைப்படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து இருக்கிறது. வரும் காலங்களிலும், படம் நிச்சயம் வசூலில் அடுத்த லெவலுக்கு செல்லும் என பலரும் கூறி வருகிறார்கள்.





