இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிவாஜி கணேசன் சௌந்தர்யா ரம்யாகிருஷ்ணன் சித்தாரா லட்சுமி மணிவண்ணன் உள்ளிட்டோர் நடித்த படம் படையப்பா. மிகப்பெரிய வெற்றியை பெற்ற படமாகவும் இது இருந்தது. நீலாம்பரி கேரக்டரில் நடித்த ரம்யா கிருஷ்ணனுக்கு பெரிய வரவேற்பை கொடுத்தது.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் படையப்பா படம் குறித்து பேசிய இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் கூறியதாவது, அவ்வை சண்முகி படத்தில் சிவாஜி கணேசன் நடிக்க வேண்டிய கேரக்டரில்தான் ஜெமினி கணேசன் நடித்தார். அதன்பிறகு படையப்பா படத்தில் சிவாஜி கணேசனை ரஜினிக்கு அப்பாவாக நடிக்க வைத்தோம்.
மைசூரில் மேல்கோட்டை என்ற பகுதியில் முதல் நாள் படப்பிடிப்பு நடந்தது. காலை 7 மணிக்கே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சிவாஜி கணேசன் கமலா அம்மாவுடன் வந்து விட்டார். மற்ற நடிகர் நடிகைகள் யாரும் அந்த நேரத்தில் வராததால், சிவாஜி கணேசன் நடிக்கும் காட்சியை எடுக்க முடிவு செய்தேன்.
அங்குள்ள உயரமான படிக்கட்டுகளில் சிவாஜி கையில் வேலுடன் செருப்பு அணியாமல் கீழே இறங்கி வருவது போல் ஒரு காட்சியை எடுத்தேன். அந்த படிக்கட்டுகளில் கைபிடியும் கிடையாது. கொஞ்சம் பேலன்ஸ் தவறினாலும் கீழே விழும் ஆபத்து உள்ளது. அதனால் சிவாஜியிடம் நடிக்க முடியுமா என்று கேட்டுவிட்டு அந்த காட்சியில் நடிக்க வைத்தேன்.
கையை பிடித்து அவரே உயரத்தில் சென்று நிற்க வைத்துவிட்டு கீழே இறங்கி வந்து கேமராவில் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது சிவாஜி கீழே இறங்கி வரும்போது சிவாஜிக்கு பின்னால் நிறைய பேர் வந்துவிட்டனர். இதனால் மீண்டும் சிவாஜி மேலே சென்று இறங்கி வருவது போல் காட்சி எடுக்க வேண்டுமே என எனக்கு கோபம் வந்துவிட்டது. இதனால் அங்கிருந்த சில ஐயர்களை நான் ஷூகாலால் கோபமாக எட்டி உதைத்து விட்டேன்.
அதற்கு பிறகு அங்கு வந்த ரஜினியிடம், என்ன பெரிய டைரக்டர் இவன்? ஐயர்களை எல்லாம் காலால் எட்டி உதைக்கிறான்? என்று கோபமாக பேசியிருக்கிறார். அந்த ஐயர்கள் எல்லாம் நம்ம கம்பெனி ஆர்ட்டிஸ்ட் தான் சார். ஷூட்டிங் பாதுகாப்புக்காக வரும் அவர்களை இதுபோன்ற கேரக்டர்களில் கூட்டத்தில் நிற்க வைத்துவிடுவது வழக்கம் என்று ரஜினியிடம் நான் விளக்கம் சொன்னேன் என்று இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





