பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று உலகம் முழுவதும் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவான புஷ்பா 2 படம் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. படம் பார்த்த ரசிகர்களும், பிரபலங்களும் படம் சூப்பர் என்று பாசிடிவ் விமர்சனம் சொல்லி வருகின்றனர். நிச்சயமாக எதிர்பார்த்த அளவுக்கு புஷ்பா 2 படத்துக்கு நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது.
இதற்கிடையே நேற்று ஐதராபாத்தில் பிரிமியர் ஷோ நடந்த ஒரு தியேட்டரில், நடிகர் அல்லு அர்ஜூனும் ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்திருக்கிறார். அப்போது தியேட்டருக்குள் ஏற்பட்ட கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 39 வயது பெண் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் படம் பார்க்க வந்த அந்த பெண் இறந்த நிலையில், படுகாயமடைந்த குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளது. இதற்காக வருத்தம் தெரிவித்துள்ள மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனம், இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு உதவ உள்ளதாக எக்ஸ் தளத்தில் ஒப்புதல் தந்துள்ளது.
புஷ்பா 2 படம் தமிழகத்தில் 800க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீஸாகி ஓடி வருகிறது. இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் மட்டுமின்றி படம் பார்த்த திரை பிரபலங்களும் தங்களது விமர்சனங்களை கூறி வருகின்றனர். இதில் இயக்குனர் அட்லி, புஷ்பா 2 படம் குறித்து தனது விமர்சனத்தை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, அல்லு அர்ஜூன், வாவ் சார்… இந்த படம் என்னுடைய இதயத்தை தொட்டுவிட்டது. உங்களின் நடிப்பு மிக பிரமாதமாக இருந்தது. இன்னொரு பிளாக்பஸ்டர் படம் கொடுத்ததற்கு வாழ்த்துகள் சார். இந்த படத்துக்காக இயக்குனர் சுகுமாரன் கடுமையாக உழைத்திருக்கிறார். அவரது கடின உழைப்பை நான் நேசிக்கிறேன்.
புஷ்பா 2 படம் உருவாக உழைத்த மொத்த படக்குழுவுக்கும் என் வாழ்த்துகள். குறிப்பாக இந்த படத்தில் நடித்த ராஷ்மிகா மந்தனா நடிப்பில் மிரட்டி இருக்கிறார். பகத் பாசில் நீங்கள் lethal bro ( நடிப்பில் மிகவும் கொடியவர்) என்று விமர்சித்திருக்கிறார். ஆக மொத்தத்தில் புஷ்பா 2 படத்துக்கு திரை பிரபலங்களும் வாழ்த்துகளை அள்ளி தருவதால், ரூ. 1000 கோடி வசூல் நிச்சயம் என்று படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.





