தமிழ் சினிமாவில் ஒரு சகாப்தமாக வாழ்ந்து மறைந்தவர் இயக்குனர் பாரதிராஜா. ஸ்டுடியோவுக்குள் இருந்த கேமராவை செம்மண் படிந்த புழுதிக்காடுகளுக்குள் எடுத்துச் சென்றனர். கிராமத்து மக்களின் வாழ்க்கையை திரையில் கொண்டு வந்த யதார்த்த படைப்பாளி. தமிழ் சினிமாவில் புதிய அடையாளமாக பல நட்சத்திர கலைஞர்களை ரசிகர்களுக்கு தந்தவர்.
அந்த வகையில் இயக்குனர் பாரதிராஜா அறிமுகப்படுத்திய நடிகர் நடிகைகள் பட்டியல் பெரியது. அதுகுறித்து பார்க்கலாம். நடிகர் முத்துராமன் மகன் நவரச நாயகன் கார்த்திக்கை அலைகள் ஓய்வதில்லை படத்தில் பாரதிராஜா அறிமுகம் செய்தார். இந்த படம் 1981ல் வெளியானது. இந்த படத்தில் தான் நடிகை ராதாவும் அறிமுகமானார்.
அதே போல் பாரதிராஜா இயக்கத்தில் 1978ம் ஆண்டில் வெளியான படம் கிழக்கே போகும் ரயில். இதில் நடிகர் சுதாகர் நடிகை ராதிகா இருவரையும் பாரதிராஜா அறிமுகம் செய்தார். 1983ம் ஆண்டில் வெளியான படம் மண்வாசனை. இந்த படத்தில் நடிகை ரேவதி நடிகர் பாண்டியன் இருவரையும் பாரதிராஜா அறிமுகம் செய்தார். கல்லுக்குள் ஈரம் என்ற படத்தில் நடிகை விஜயசாந்தியை அறிமுகம் செய்தது பாரதிராஜா தான்.
கடந்த 1986ல் வெளியான கடலோர கவிதைகள் படத்தில் ரேகா அறிமுகமானார். இந்த படத்தில்தான் அதுவரை வில்லனாக இருந்த சத்யராஜ் ஹீரோவாக அறிமுகமானார். 1991ம் ஆண்டில் வெளியான பாரதிராஜா இயக்கிய புதுநெல்லு புது நாத்து படத்தில் நடிகர் நெப்போலியன் நடிகை சுகன்யா இருவரும் அறிமுகம் ஆகினர்.
அதே போல் 1992ம் ஆண்டில் வெளியான நாடோடித் தென்றல் படத்தில் நடிகை ரஞ்சிதாவை அறிமுகப்படுத்தினார். 2004ம் ஆண்டில் வெளியான கண்களால் கைது செய் படத்தில் நடிகை பிரியாமணி அறிமுகமானார். அத்துடன் பாரதிராஜா இயக்கிய புதிய வார்ப்புகள் படத்தில் கே பாக்யராஜ் நடிகை ரதி ஆகியோரை அறிமுகப்படுத்தினார்.
16 வயதினிலே படத்தில்தான் நடிகர் கவுண்டமணியை பாக்யராஜ் பரிந்துரைப்படி பாரதிராஜா நடிக்க வைத்தார். மேலும் தனது மகன் மனோஜ்குமாரை தாஜ்மகால் படத்தில் ஹீரோவாக பாரதிராஜா அறிமுகம் செய்தார். அத்துடன் மணிவண்ணன் கே பாக்யராஜ் மனோபாலா பொன்வண்ணன் சீமான் சித்ரா லட்சுமணன் போன்றவர்களும் இயக்குனர் பாரதிராஜாவின் சிஷ்யர்கள்தான். அவரால்தான் சினிமாவில் அடையாளம் பெற்றனர்.





