சில இயக்குனர்களுக்கு சில ஹீரோக்களை வைத்து படம் பண்ணவே பிடிக்கும். அதே போல் சில இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஹீரோக்களும் ரொம்ப பிடிக்கும். அந்த வகையில் இயக்குனர்கள் சிறுத்தை சிவா, எச் வினோத் போன்றவர்களுக்கு தன் படங்களை இயக்கும் வாய்ப்பை அதிகமாக தந்தவர் அஜீத்குமார்.
அதே போல் இயக்குனர் அட்லிக்கு பிகில், தெறி, மெர்சல் என அடுத்தடுத்த தனது படங்களை இயக்க வாய்ப்பளித்தவர் விஜய். நடிகர் ரஜினிகாந்த் கபாலி படத்தை தொடர்ந்து காலா படத்தை இயக்கும் வாய்ப்பை பா ரஞ்சித்துக்கு வழங்கினார். கங்குவா படத்தின் படுதோல்விக்கு பிறகும் சிறுத்தை சிவா இயக்கும் ஒரு படத்தில் நடிக்க நடிகர் அஜீத்குமார் கமிட்டாகி உள்ளார்.
அதே போல் இயக்குனர் வெற்றிமாறனுக்கு மிகவும் பிடித்த நடிகர் தனுஷ். அவர் இயக்குனராக அறிமுகமான முதல் படம் பொல்லாதவன் படத்தில் தனுஷ்தான் கதாநாயகனாக நடித்திருந்தார். தொடர்ந்து ஆடுகளம், அசுரன், வடசென்னை என தனது இயக்கத்தில் தனுஷை நடிக்க வைத்தார். அந்த படங்களும் மாபெரும் வெற்றியை தந்தன.
இந்நிலையில் காமெடி நடிகராக இருந்த சூரியை, விடுதலை படத்தின் மூலம் கதாநாயகனாக இமேஜை உயர்த்தியவர் இயக்குனர் வெற்றிமாறன்தான். விடுதலை படத்தில் சூரிக்கு கிடைத்த அபார வரவேற்பு கருடன், கொட்டுக்காளி படங்களில் தொடர்ந்தது. இப்போது மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2 படத்திலும் சூரி நடிப்பு எதிர்பார்ப்பில் இருந்து வருகிறது.
இந்நிலையில் விடுதலை 2 படத்தை தயாரித்த தயாரிப்பாளர் எல்ரெட் குமார், அடுத்ததாக தயாரிக்கும் படத்தை மதிமாறன் டைரக்ட் செய்கிறார். இவர் ஜீவி பிரகாஷ்குமார் நடித்த செல்பி படத்தை இயக்கியவர். இயக்குனர் வெற்றிமாறனுடன் விடுதலை படத்திலும் பணிசெய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மதிமாறன் இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடிகர் சூரி நடிக்கிறார். இந்த படத்துக்கு இயக்குனர் வெற்றிமாறன் கதை எழுதுகிறார். அதனால் விடுதலை 1, விடுதலை 2 படங்களை தொடர்ந்து மீண்டும் சூரி நடிக்கும் படத்துக்கு இயக்குனர் வெற்றிமாறன் கதை எழுதுகிறார். அவரது கதையில் மீண்டும் சூரி நடிப்பதால் நடிகர் தனுஷ் போல சூரியும் வெற்றிமாறனின் ஆஸ்தான நடிகராக மாறிவிட்டாரா என்று ரசிகர்கள் ஆச்சரியப்படுகின்றனர்.





