தமிழ் சினிமாவில் 47 ஆண்டுகளாக கொண்டாடப்படும் இசையமைப்பாளராக இசைஞானி இளையராஜா இருந்து வருகிறார். இதுவரை 1200க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். பல ஆயிரக்கணக்கான பாடல்களுக்கும், படங்களுக்கு பின்னணி இசையும் அமைத்துள்ளார். வருகிற 2025ம் ஆண்டில் சிம்பொனி இசையை வெளியிடப் போவதாகவும் அவர் அறிவித்திருக்கிறார்.
வருகிற 20ம் தேதி, இளையராஜா இசையில் விடுதலை 2 படம் வெளிவர இருக்கிறது. இந்த படத்தின் இளையராஜா எழுதி இசைமைத்த தெனம் தெனமும் உன் நினைப்பு என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலானது. 84 வயதான இளையராஜாவின், இந்த பாடல் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
இளையராஜாவின் பழைய பாடல்கள், சமீபகாலமாக படங்களில் பயன்படுத்தப்படுகின்றன. தன்னுடைய அனுமதியின்றி இசையை, பாடல்களை பயன்படுத்தும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். கூலி படத்தில் இடம்பெற்ற ஒரு பாட்டுக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியவர் இளையராஜா.
இந்நிலையில் இசைஞானி இளையராஜா இன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவிலுக்கு காலையில் சுவாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அப்போது கருவறைக்கு முன் இருக்கும் அர்த்தமண்டபத்தில் இளையராஜா நுழைந்தபோது, அவரை அங்கிருந்த சிலர் அவரை தடுத்து நிறுத்தி உள்ளனர்.
கருவறையை அடுத்துள்ள அர்த்தமண்டப பகுதிக்குள் செல்வது விதிமீறல் என அங்கிருந்த சில ஜீயர்கள், ஆட்சேபம் தெரிவித்த நிலையில் இளையராஜா அதே இடத்தில் நின்று விட்டார். பிறகு அர்த்த மண்டபத்தின் படி அருகே நின்று கொண்டே இளையராஜா கோவில் நிர்வாகத்தில் மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
அவருக்கு பூ மாலைகள் அணிவிக்கப்பட்டது. பிரசாதங்கள் வழங்கப்பட்டது. அர்த்த மண்டபத்தில் இருந்து அவர் வெளியேற்றப்பட்ட இந்த சம்பவம், பெரிய அளவில் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தீவிர ஆன்மீகவாதி, கடவுள் பக்தி கொண்டவர். உலகளவில் தமிழகத்துக்கு பெருமை சேர்த்த இசைஞானியை, கோவில் அர்த்த மண்டபத்துக்கு நுழைய விடாமல் தடுத்தது பெரும் அதிர்ச்சியை, தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.





