தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் பா ரஞ்சித். அட்டக்கத்தி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். காதல் காமெடி படமாக தனது முதல் படத்தை தந்தார். அட்டக்கத்தி தினேஷ், அட்டக்கத்தி நந்திதா, அட்டக்கத்தி ஐஸ்வர்யா ராஜேஷ் என இந்த படத்தில் நடித்த 3 பேருமே இன்று சினிமாவில் கவனிக்கப்படும் இடத்தில் இருக்கின்றனர்.
அட்டக்கத்தி படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் பா ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் படம் பெரிய கவனத்தை பெற்றது. தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் கபாலி, காலா என அடுத்தடுத்து 2 படங்களை பா ரஞ்சித் இயக்கினார். கபாலி கேங்ஸ்டர் படமாக பெரிய வெற்றியை பெற்றது.
ஆனால் காலா படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இந்த படத்தில் நில உரிமை பிரச்னையை மையப்படுத்தி பா ரஞ்சித் படம் எடுத்திருந்தார். மும்பை தாராவி பகுதியை அபகரிக்க ஆசைப்படும் அரசியல்வாதியாக நானா படேகர் அசத்தலாக நடித்திருந்தார். தாராவி பகுதியை பாதுகாக்கும் தாதா கேரக்டரில் ரஜினிகாந்த் கரிகாலனாக நடித்திருந்தார்.
இந்த படத்தில் ஹூமா குரேஷி, மணிகண்டன், ஈஸ்வரி ராவ், சமுத்திரக்கனி, சம்பத் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணனின் இசையில் கண்ணம்மா, அடி வாடி என் தங்கச் சிலை போன்ற பாடல்கள் டிரண்டிங் ஆக இருந்தன. 2018ம் ஆண்டில் ஜூன் மாதம் வெளியான இந்த படம் ரூ. 160 கோடி ரூபாய் வரை வசூலித்து தோல்வி படமாக மாறியது.
சமீபத்தில் காலா படம் குறித்து இயக்குனர் பா ரஞ்சித் ஒரு நேர்காணலில் பேசியதாவது, ரஜினி நடித்த கபாலி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து வெளியான காலா, தோல்விப் படம் என்று கூற முடியாது. அதை திட்டமிட்டு தோல்வி படமாக மாற்றினார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அதைப்பற்றி இப்போது பேச முடியாது.
ஆனாலும் படத்தை தோல்வி அடைய செய்ய, திட்டமிட்டே காய்நகர்த்தி அதை செய்து முடித்தார்கள். காலா படம் ரசிகர்களுக்கு முழுமையாக திருப்தி அளித்ததா என்று நான் சொல்ல முடியாது. அதில் சில குறைகள் இருந்ததுதான். ஆனால் முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டிய படமாக காலா இல்லை. படத்தில் ரசிக்கும்படியான நிறைய விஷயங்கள் இருந்தன. கொண்டாடப்பட வேண்டிய காட்சிகளும் இருந்தன. ஆனால் சில காட்சிகளை மட்டுமே வைத்து மொத்தமாக படம் மோசம் என முடிவெடுத்தது ஏற்க முடியாத விஷயம் என்று கூறியிருக்கிறார்.





