தமிழ் சினிமாவில் கடந்த 1976ம் ஆண்டில் வெளியான அன்னக்கிளி என்ற படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இளையராஜா. பஞ்சு அருணாசலம் தயாரித்த இந்த படத்தில் சிவக்குமார், சுஜாதா, படாபட் ஜெயலட்சுமி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தை தேவராஜ், மோகன் டைரக்ட் செய்திருந்தனர்.
இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அன்னக்கிளி உன்னத் தேடுதே என்ற பாடல், பாடகி எஸ். ஜானகி குரலில் பட்டிதொட்டி எங்கும் ஒலித்தது. இந்த பாடலின் தனித்துவமும், இசையும், அழகும் இளையராஜாவின் இசை ஞானத்தை முதல் படத்திலேயே வெளிப்படுத்தியது.
அன்னக்கிளி முதல், இனி வர உள்ள விடுதலை 2 படம் என, தமிழ் சினிமாவில் அன்று முதல் 47 ஆண்டுகளாக இசை சக்கரவர்த்தியாக இருந்து வருகிறார் இளையராஜா என்றால் அது மிகையல்ல. இதற்கிடையே இளையராஜா வாழ்க்கை வரலாறு படத்தை 2 பாகங்களாக எடுக்க, இந்த ஆண்டின் துவக்கத்திலேயே அறிவிக்கப்பட்டது.
மும்பையை சேர்ந்த தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாகவும், இளையராஜா கேரக்டரில் நடிகர் தனுஷ் நடிக்கவும் இந்த படத்தை கேப்டன் மில்லர், சாணிக்காயிதம் படங்களின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கவும் முடிவானது. ஆனால் கடந்த சில தினங்களாக, இந்த படம் டிராப் செய்யப்பட்டதாக தகவல் வைரலாகி வருகிறது.
இப்போதைய லேட்டஸ்ட் தகவலின்படி, இளையராஜா பயோபிக் படத்தை தயாரிக்க இருந்த மும்பை நிறுவனம் ஒதுங்கிக்கெ்ாண்டது. ஆனால் எப்படியும் இளையராஜா பயோபிக்கில் இளையராஜாவாக நடித்தே தீர வேண்டும் என்ற ஒரு குறிக்கோளில் நடிகர் தனுஷ் இருந்து வருகிறார்.
அதனால் சமீபத்தில் டெல்லி சென்ற நடிகர் தனுஷ், அங்குள்ள சில கார்பரேட் தயாரிப்பு நிறுவனங்களை சந்தித்து, இளையராஜா படம் தயாரிப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். இந்த படத்தில் தனுஷூம் ஒரு தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இயக்குனர் அருண் மாதேஸ்வரன், இளையராஜா பயோபிக் குறித்த ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் பணியில் ஈடுபட்டு வருகிறார். அடுத்த ஆண்டு ஜூலைக்கு பிறகு இளையராஜா பயோபிக் ஷூட்டிங் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.





