கடந்த 1990களில் பல படங்களில் ஹீரோவாக நடித்தவர் விக்னேஷ். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் விக்னேஷ் கூறியதாவது, வண்ண வண்ண பூக்கள் படத்தில் நான்தான் ஹீரோவாக நடித்திருக்க வேண்டும். அது நடக்காமல் போனதால் ராமன் அப்துல்லா படத்தில் பாலு மகேந்திரா சார் என்னை நடிக்க வைத்தார். என் மீது பாலு மகேந்திரா நிறைய அன்பும் பாசமும் வைத்திருந்தார். எங்களுக்குள் நல்ல ஒரு புரிதல் இருந்தது.
அதனால் அவர் என்னை அவரது படங்களில் நிறைய நடிக்க வைத்த பெரிய ஹீரோவாக்க வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டார். ஆனால் எங்களுக்குள் ஒரு மிஸ் அண்டர் ஸ்டாண்டிங் ஆகி விட்டது. இதை இதுவரை நான் யாரிடமும் சொல்லவில்லை. என் மீது கொண்ட அதீத பாசம் காரணமாக அவர் எனக்காக ஒரு பெண் பார்த்துவிட்டார்.
ஒரு நாள் இரவு 9 மணிக்கு ஆபீஸ்க்கு கூப்பிட்டார். அவர் என்னை ராஜா ராஜா என்றுதான் அழைப்பார். அப்போது ராஜா இந்த போட்டோவை பார் என்று ஒரு பெண் போட்டோவை காட்டினார். இந்த பொண்ணை தான் நீ கல்யாணம் பண்ணிக்கப் போறே என்று கூறிவிட்டார். ஆனால் நான் ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்துக் கொண்டிருக்கிறேன். அந்த விஷயம் அவருக்கு தெரியாது.
எனக்கு அப்பா அம்மா என்று யாரும் இல்லை என்பதால் என் மீது கொண்ட அக்கறையால் எனக்கு திருமணம் செய்ய பெண் பார்த்திருக்கிறார். நடிகை மௌனிகாவின் தங்கை தான் அந்த பெண். அவர்கள் வீட்டிலும் ஓகே சொல்லிவிட்டனர். ஆனால் ராமன் அப்துல்லா படம் முடிகிற ஸ்டேஜில் இருந்தது. என் காதலை சொன்னால் படத்தை நிறுத்தி விடுவாரோ என்ற பயமும் எனக்கு இருந்தது.
திருமண அழைப்பிதழில் பாரதிராஜா பாலு மகேந்திரா பெயர் எல்லாம் போட்டு அச்சடித்து விட்டனர். ஆனால் பத்திரிகை தருவதற்கு முன்பே நான் என் காதலியுடன் சென்று திருப்பதியில் திருமணம் செய்துக்கொண்டு வந்துவிட்டேன். அடுத்தநாள் பத்திரிகையில் எனது ரகசியம் திருமணம் செய்தி வந்துவிட்டது. அதைப் பார்த்ததும் பாலு மகேந்திரா சார் மிகவும் அதிர்ச்சியும் அப்செட்டாகி விட்டார்.
ஆனால் அவரை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கம் கிடையாது. சூழ்நிலை அப்படி ஆகி விட்டது. சின்ன வயதில் இருந்தே என்னை அந்த பெண் காதலித்தார். அவரது குடும்பத்துக்கும் என்னை சிறுவயதில் இருந்தே தெரியும். நல்ல பையன் என்று அவர்களும் எங்கள் காதலுக்கு தடையாக இருந்தது இல்லை. இதனால் பாலு மகேந்திரா என் மீது அதிக வருத்தத்தில் இருந்தார். அதனால் என்னை வைத்து அவர் படங்கள் பிறகு இயக்கவில்லை என்று நடிகர் விக்னேஷ் அதில் கூறியிருக்கிறார்.





