நடிகர் மணிவண்ணன் இயக்குநராக தமிழ் சினிமாவில் முதலில் ரசிகர்களுக்கு அறிமுகமானார். பின்னர் ஒரு கட்டத்தில் சிறந்த நடிகராக தனது ஆளுமையை திரையில் வெளிப்படுத்தினார். வாழ்க்கை சக்கரம், கொடி பறக்குது என அவர் டைரக்டர் செய்த படங்களில் நடித்த அவர், பிறகு முழுநேரமாக பிற இயக்குநர்களின் இயக்கத்தில் நடித்தார்.
நடிகர் சத்யராஜூக்கு ஒரு முக்கியமான இடத்தை பெற்றுத் தந்தவர் இயக்குநர் மணிவண்ணன்தான். அவர் இயக்கிய பாலைவன ரோஜாக்கள், வாழ்க்கை சக்கரம், அமைதிப்படை, 100வது நாள், 24 மணி நேரம் போன்ற படங்கள்தான், சத்யராஜூக்கு தமிழ் சினிமாவில் திருப்புமுனையாக அமைந்தன.
மணிவண்ணன், சத்யராஜ் இருவருமே கோயம்புத்தூரை சேர்ந்தவர்கள்தான். அங்குள்ள அரசு கலைக்கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். ஆனால் சத்யராஜ் கல்லூரி படிப்பை நிறைவு செய்தார். ஆனால், மணிவண்ணன் பாதியிலேயே டிஸ்கண்டினியூ செய்துவிட்டார். இருவருமே சினிமா ஆசையில் சென்னைக்கு வந்து, ஜெயித்தவர்கள்.
இயக்குநராக நல்ல படங்களை தந்த மணிவண்ணன், ஒரு கட்டத்தில் நடிகராக மாறி பல படங்களில் நடித்தார். 1990, 2000ம் களில், அவர் இல்லாத படங்களே இல்லை என்னும் அளவுக்கு மிக மிக பிஸியான நடிகராக இருந்தார். ஆனால், 2013ம் ஆண்டில் திடீரென காலமாகி விட்டார். அவரது இழப்பு, ரசிகர்களை மிகவும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.
சமீபத்தில் மணிவண்ணனின் உடன்பிறந்த சகோதரி ஒரு நேர்காணலில் பேசி இருக்கிறார். அதில் தனது அண்ணன் மணிவண்ணன் குறித்த பல விஷயங்களை கூறி இருக்கிறார். அண்ணன் உட்பட எங்கள் குடும்பத்தில் யாருக்குமே கடவுள் நம்பிக்கை கிடையாது. வீட்டில் சுவாமி படமே இருக்காது. நான் மட்டும்தான் கோவிலுக்கு போவேன்.
ஒருமுறை அண்ணனுக்கு கோவையில், முதுகுதண்டுவடத்தில் ஆபரேசன் நடந்தது. அப்போது நல்ல நேரத்தில் ஆபரேசன் செய்யலாம் என பேசிய போது அண்ணன் மணிவண்ணன், ‘டாக்டர் எனக்கு எமகண்ட நேரத்தில் ஆபரேசன் செய்யுங்கள். நல்ல நேரத்தில் ஆபரேசன் செய்து ஏதேனும் தவறு நடந்துவிட்டால், உங்கள் மீது பழிவந்து விடும். அதுவே எமகண்ட நேரத்தில் செய்து, ஆபரேசனில் பிரச்னை ஏற்பட்டால் எமன் மீது பழியை போட்டு விட்டு நீங்கள் தப்பித்து விடலாம்’ எனக் கிண்டலாக கூறினார் என்று, அவரது சகோதரி அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





