தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், நடப்பு தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கம் என்ற இரண்டு அமைப்புகள் தமிழ் சினிமாத் துறையில் இப்போது செயல்பட்டு வருகின்றன. ஒரே அமைப்பு இரண்டு பிரிவுகளாக தனிப்பட்டு செயல்படுவதை தவிர்க்க மற்ற சினிமா சங்கங்கள் வலியுறுத்தியும் இந்த பிரிவினை தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்நிலையில் பெப்ஸி அமைப்பின் தலைவர் இயக்குனர் ஆர்கே செல்வமணி, தயாரிப்பாளர் சங்கத்தினர் தங்களை எதிரி போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்குவதாக தெரிவித்துள்ளார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அனுப்பிய கடிதத்திற்கு, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் தொழிலாளர்கள் சம்மேளத்தின் சார்பாக பெப்சி யூனியன் தலைவர் ஆர் கே செல்வமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, தயாரிப்பாளர்கள் கூட்டத்தில் பிரச்னைகள் பற்றி விவாதிக்காமல் பெப்ஸி அமைப்பின் மீது குற்றம் சொல்லிக் கொண்டிருப்பது நியாயமா என்று கேள்வி எழுப்பி உள்ளார். நடிகர்கள் தனுஷ் சிம்பு உள்ளிட்ட சில நடிகர்கள் மீது ரெட் கார்டு மற்றும் நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ள 300 பேருக்கும் ஒத்துழைப்பு வழங்கக் கூடாது என்ற ஒப்பந்தங்களை தவிர மற்ற அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக செல்வமணி சுட்டிக்காட்டி உள்ளார்.
தற்போது தலைவர் மற்றும் பெரும்பான்மையான செயற்குழுஉறுப்பினர்கள் இல்லாமல் அவசர பொதுக்குழு என்ற பெயரில் ஒரு கூட்டத்தை நடத்தி பெப்ஸியை கலங்கப்படுத்தி இருப்பதாகவும் ஆர்கே செல்வமணி அந்த அறிக்கையில் விமர்சித்துள்ளார்.
மேலும் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமசாமி மீதுள்ள நன்மதிப்பின் காரணமாக, இதுவரை பொறுமை காத்து வந்ததாகவும் இனியும் தங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் ஆர்கே செல்வமணி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். இது தற்போது தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், நடப்பு தயாரிப்பாளர் சங்கம், பெப்ஸி அமைப்பின் கீழ் உள்ள பல சினிமா துறை சார்ந்த சங்கங்களில் இருந்து ஆக்டிவ் கமிட்டி ஒன்றை உருவாக்கி அதன்மூலமாக மட்டுமே சினிமா துறை சார்ந்த பல பிரச்னைகளை தீர்வு காணப்பட வேண்டும் என்று பெப்ஸி அமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், தன்னிச்சையாக முடிவுகளில் தயாரிப்பாளர் சங்கம் ஈடுபட்டு வருவதை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது என ஆர்கே செல்வமணி எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.





