ரஜினிகாந்த் தற்போது கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்த திரைப்படத்தில் சுருதிஹாசன் சத்யராஜ் உபேந்திரா, நாகர்ஜுனா உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். கேமியோ ரோலில் அமீர்கான் நடித்திருக்கிறார். ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டதாக தகவல் வெளியானது. பின்னர் அது உறுதியும் படுத்தப்பட்டது.
இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். ஏற்கனவே ரஜினி பிறந்த நாளை முன்னிட்டு, வெளியான வீடியோ காட்சியில் அதன் துள்ளலான இசையும் ரஜினியின் அசத்தலான நடன அசைவும் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்தது. தங்கக் கடத்தலை மையமாக வைத்து இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.
நான்கு மாதங்களுக்கும் மேலாக இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இன்னும் 20 சதவீத காட்சிகள் மீதம் இருப்பதாக கூறப்படுகிறது. அனேகமாக கூலி திரைப்படம், மே அல்லது ஜூன் மாதம் வெளியாகும் என்று கூறுகிறார்கள். இதனிடையே ரஜினிகாந்தின் அடுத்த திரைப்படங்கள் குறித்த தகவல்களும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன.
இதில் முக்கியமாக நாம் பார்ப்பது ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தைப் பற்றி தான். ஏற்கனவே இதன் முதல் பாகம் 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. சொல்லப்போனால் ரஜினிகாந்தின் திரையுலக பயணத்திலேயே அதிகம் வசூல் செய்த திரைப்படமாக ஜெயிலர் அமைந்தது.
கிட்டத்தட்ட 700 கோடி ரூபாய்க்கு மேல் அந்த திரைப்படம் வசூல் செய்ததாக கூறுகிறார்கள். இதனால் மகிழ்ச்சி அடைந்த சன் பிக்சர்ஸ் நிறுவனம், ரஜினிகாந்த், படத்தின் இயக்குனர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு பரிசளித்தது. இப்படியான சூழலில் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தை நெல்சன் எடுக்கப்போவதாக தொடர்ந்து பேசப்பட்டு வந்தது. ஆனால் இதற்கு இயக்குனர் பதில் கூறாமலேயே இருந்து வந்தார்.
இப்படியான சூழலில் தற்போது அதன் இரண்டாம் பாகம் எடுக்க இருப்பது உறுதியாகியிருக்கிறது. இதற்கான அறிவிப்பு நாளை வெளியாகிறது. இந்த முறை சற்று புதிதாக திரையரங்குகளிலும் அதற்கான அறிவிப்பு வீடியோவை வெளியிட சந்தித்து நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதற்காக சென்னை, கோவை திருநெல்வேலியில் உள்ள குறிப்பிட்ட சில திரையரங்குகளில் நான்கு நிமிடங்கள் கொண்ட அறிவிப்பு வீடியோ மாலை 6 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 15 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





