சமீபத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்களின் போராட்டம் டெல்லியில் நடந்தது. இதில் பாஜக கல்வித்துறை அமைச்சர் ராஜினாமா செய்த நிலையில் இந்த போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துவிட்டது. மாணவர்களின் இந்த போராட்டம் குறித்து பாஜக எம்பி நடிகை கங்கனா ரெனாவத் சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் நடந்த மாணவர்களின் போராட்டம் குறித்து பாஜக எம்பி நடிகை கங்கனா ரெனாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அந்த பதிவில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்ட வீடியோக்களை பார்த்தேன். என் வாழ்நாளில் ஒரே இடத்தில் இவ்வளவு மோசமான காட்சிகளை நான் பார்த்ததே இல்லை.
அவர்கள் பேசும் விதம் பயன்படுத்தும் மொழி மிகக் கொடூரமாகவும் கீழ்த்தரமாகவும் உள்ளது. இவர்களை யார் பெற்று வளர்க்கிறார்கள்? இந்தியா அழகான பன்முகத்தன்மை கொண்ட மக்கள் கண்ணியத்துடனும் கலாச்சாரத்துடன் வாழும் இடம். உங்களை நீங்களே கரப்பான் பூச்சிகள் என்று அழைத்துக் கொண்டு அவற்றைப் போலவே செயல்படுகிறீர்கள்.
உலகத்தில் உங்கள் குப்பையையும் அசுத்தத்தையும் காட்டுகிறீர்கள் என்று அந்த பதிவில் கங்கனா ரெனாவத் கூறியிருந்தார். நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட ஜென்ஸி இளைஞர்களை சாக்கடை தலைமுறை என்று கங்கனா ரெனாவத் விமர்சித்திருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள நடிகர் சோனு சூட், பொது வாழ்வில் இருப்பவர்கள் கவனமாக பேச வேண்டும் என்றும் அட்வைஸ் செய்திருக்கிறார்.
இது குறித்து பேசிய நடிகர் சோனு சூட் கூறியதாவது, கங்கனா ரெனாவத் கூறியதை நான் இன்னும் கேட்கவில்லை. ஆனால் அந்த இளைஞர்கள் தான் நடிகர்களை உருவாக்குகிறார்கள். நீங்கள் இந்த இடத்துக்கு வர உதவி இருக்கிறார்கள். அவ்வாறு கங்கனா பேசியிருந்தால் அது அவமானகரமான ஒன்று. அவர் அப்படி சொல்லி இருக்கக் கூடாது.
எவ்வளவு காலம் இளைஞர்கள் உங்களுடன் நிற்கிறார்களோ அந்த அளவுக்கு நீங்கள் ஜொலிப்பீர்கள். சிந்திய வார்த்தைகளை அள்ள முடியாது என்பார்கள். பொதுவாழ்வில் இருப்பவர்கள் பேசுவதற்கு முன்னால் பலமுறை யோசித்த பின்பே பேச வேண்டும். ஏனென்றால் பொதுமக்கள் கடவுளின் இன்னொரு வடிவம் என்று அதில் சோனு சூட் கூறியிருக்கிறார்.





