சிவகார்த்திகேயன், தமிழ் சினிமாவில் ஆகச்சிறந்த ஒரு நடிகராக வலம் வந்துக்கொண்டு இருப்பவர். துவக்கத்தில் விஜய் டிவியில் அது இது எது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சிவகார்த்திகேயன், பின் மற்ற சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார். குறிப்பாக சினிமா விருது விழாக்கள், இசை வெளியீட்டு விழாக்களை தொகுத்து அளித்தார். நடிகர் நடிகைகளை நேர்காணல் செய்தார்.
இந்நிலையில், இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில், மெரினா என்ற படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அவரது இளமையான வாலிப தோற்றமும், ரஜினியின் மேனரிசமும், காமெடி பேச்சும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சிவகார்த்திகேயன் – சூரி காம்பினேஷனில் வந்த படங்கள், பெரும் வெற்றியை பெற்றன.
கேடி பில்லா கில்லாடி ரங்கா, மனம் கொத்திப் பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், ரெமோ, சீமராஜா உள்பட சமீபத்தில் வந்த மாவீரன் வரை, பல படங்கள் சிவகார்த்திகேயனுக்கு நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுத் தந்தது. எனினும் எதிர்பார்க்கப்பட்ட சில படங்கள், படுமோசமாக தோல்வியடைந்தது.
இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் மனம் திறந்து பேசிய சிவகார்த்திகேயன், கமல் நடித்த காமெடி படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் அவரோட ரசிகன். பஞ்ச தந்திரம், மைக்கேல் மதன காமராஜன், காதலா காதலா போன்ற படங்களை மிகவும் ரசிப்பேன். படத்தில் நான் நடிக்கும் போது, சீன் பேப்பரை ஒருமுறை பார்த்துக்கொள்வேன். டயலாக்குகளை மனப்பாடம் செய்யும் பழக்கமே இல்லை என்றும் கூறி இருக்கிறார்.
இயக்குநர் ஆகும் ஆசையில் தான் சினிமாவுக்கே வந்தேன். ஆனால், இங்கு வந்த பிறகுதான், இயக்குநராக ஆவதற்கான முக்கால்வாசி விஷயங்களை நான் கற்றுக்கொள்ளவே இல்லை என்பது தெரிகிறது. ரொம்ப வருஷங்களுக்கு முன்பு, நெல்சனிடன் உதவி இயக்குநராக பணிசெய்திருக்கிறேன். ஆனால், டைரக்டர் ஆசை இப்போதைக்கு இல்லை. இன்னும் நடிகராக கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. அதனால், இயக்குநர் குறித்த யோசனை இப்போதைக்கு இல்லை என்றும் அந்த நேர்காணலில் உறுதியாக கூறி இருக்கிறார்.
நடன இயக்குநராக சினிமாவுக்குள் வந்த கமல்ஹாசன், ஒரு கட்டத்துக்கு பிறகு கே. பாலசந்தர் படங்களில் நடித்து, இன்று உலக நாயகன் என்ற பெயருடன், தமிழ் சினிமாவின் சிகரத்தில் இருக்கிறார். இயக்குநராக ஆசைப்பட்டு வந்த சிவகார்த்திகேயனும், எதிர்காலத்தில் சிகரங்களை தொடும் இயக்குநராக, நடிகராக வெற்றி பெற வேண்டும் என்பதே, அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.





