தமிழ் சினிமாவில் கமர்ஷியல் தாண்டி நல்ல படங்களை தரக்கூடிய இயக்குனர்களில் ஒருவர் பாலா. கடந்த 25 ஆண்டுகளில் 8 படங்களை மட்டுமே தந்துள்ள இயக்குனர் பாலாவின் ஒவ்வொரு படமும் ஒரு வாழ்க்கைதான். வித்யாசமான கதைக்களத்தில் மாறுபட்ட கதைகளை படமாக்கி காட்டுவதில் வல்லவர் இயக்குனர் பாலா என்றால் அது மிகையல்ல.
கடந்த 10ம் தேதி வெளியான அவரது வணங்கான் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நடிகர் அருண் விஜய்க்கு இந்த படம் ஒரு பெரிய வெற்றிப் படமாக அமைந்திருக்கிறது. நடிகர் சூர்யா நடிக்க மறுத்த நிலையில் இந்த வணங்கான் படத்தில் நடிக்கும் வாய்ப்பு அருண் விஜய்க்கு வாய்த்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் பாலா இயக்கிய படங்களில், பெரும்பாலும் காட்சிகளை உண்மையாக தத்ரூபமாக படம் பிடிக்க விரும்புவார். அதனால் செட்டப் காட்சிகளை விட உண்மையான காட்சிகளே அவரது படத்தில் நிறைய இருக்கும். பிதாமகன் படத்தில் முதல் சண்டைக்காட்சி படமாக்கப்பட்ட விதம் குறித்து பாலா வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
இதுகுறித்து ஒரு நேர்காணலில் இயக்குனர் பாலா கூறியதாவது, பிதாமகன் படத்தில் விக்ரம் ஊருக்குள் வர்ற ஒரு காட்சியில் டீக்கடையில் ஒரு சண்டை நடக்கும். அப்போ ஸ்டண்ட் மாஸ்டர் பைட்டர்கள் 4 பேரிடம் இப்படி அப்படி என்று சொல்லிக் கொண்டு கம்போஸ் பண்ணீட்டு இருந்தார். நான் அவரை போய் உட்கார சொல்லி விட்டேன்.
அந்த 4 பைட்டர்களை கூப்பிட்டு பேசினேன். நாலு பேரு ஒரு ஆளை அடிக்கணும். அடிச்சிக்குங்க யாரு ஜெயிக்கறாங்கன்னு பார்ப்போம் அப்படீன்னு சொல்லிட்டு 3 கேமரா 3 இடத்துல பிக்ஸ் பண்ணியாச்சு. ரியலா அடிச்சுக்கிட்டாங்க. ஜெயிக்கணுமுன்னு நெனைச்சு அடி. ஹீரோன்னு நெனைச்சு அடிக்காதே.
நீ ஜெயிக்கணுமுன்னு நெனைச்சு அடி, பாவம் அவனுக்கு கையில் அடிபட்டுடுமோன்னு நீ ஹீரோன்னு கரிசனம் காட்டாதே. அவன் உன்னை எவ்ளோ வக்கிரமா அடிக்கிறானோ அதை விட ஜாஸ்தியா அடி. அப்படித்தான் அந்த பைட் எடுத்தது. அது கம்போஸ்ட் பைட் கிடையாது என்று பாலா கூறியிருக்கிறார்.





