தமிழ் சினிமாவில் லேசா லேசா படம் மூலமாக அறிமுகமானவர் நடிகை திரிஷா. ஆனால் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்த படம் நடிகர் விக்ரம் நடித்த சாமி படம் தான். இதில் பிராமண வீட்டுப் பெண்ணாக அவர் அட்டகாசமாக நடித்திருந்தார். இந்த படத்துக்கு பிறகு திரிஷா முன்னணி நடிகையாக மாறினார்.
அதன் பிறகு 20 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகியாக திரிஷா வலம் வருகிறார். தமிழில் ரஜினி கமல் விஜய் அஜீத்குமார் சிம்பு தனுஷ் ரவிமோகன் என நட்சத்திர ஹீரோக்களுக்கு அவர் ஜோடியாக நடித்து வருகிறார்.
தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் என பிறமொழி படங்களிலும் திரிஷா நடிக்கிறார். ஏகப்பட்ட விளம்பர படங்களிலும் திரிஷாவை அடிக்கடி காண முடிகிறது. விரைவில் திரிஷா சூர்யாவுடன் நடித்த கருப்பு படம் திரைக்கு வர உள்ளது. இன்னும் சில படங்களில் அவர் இப்போது பிஸியாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தவெக தலைவர் விஜயுடன் தன்னை சம்பந்தப்படுத்தி பேசியதற்கு நடிகை திரிஷா கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருந்தார். தனிப்பட்ட முறையில் என்னை விமர்சனம் செய்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்று அவர் தனது பதிவில் கூறியிருந்தது இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் நடிகை திரிஷா உலக பிரசித்தி பெற்ற ஆன்மிக தலமான திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நேற்று வந்தார். கோவிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்தார். எளிமையான சுடிதார் உடையில் யாருமே பாதுகாப்புக்கு இல்லாமல் அவர் தனியாக வந்து கோவிலுக்கு சென்று சுவாமியை தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
அங்கிருந்த பல ரசிகர்கள் அவருடன் செல்பி எடுக்க அமைதியாக சிரித்தபடி அவர் செல்பிக்கு போஸ் கொடுத்து விட்டுச் சென்றார். திருப்பதி கோவில் முன் எடுத்த தனது புகைப்படங்களை தனது வலைதள பக்கத்தில் வெளியிட்ட திரிஷா, சிறந்த நாள் இது என்றும் குறிப்பிட்டுள்ளார். சிவாஜி படத்தில் ரஜினி சிங்கம் சிங்கிளா தான் வரும் என்று பஞ்ச் டயலாக் பேசியிருப்பார். அதுபோல் திருப்பதி கோவிலுக்கு திரிஷா சிங்கிளாக வந்தது குறிப்பிடத்தக்கது.





