நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் உச்ச நட்சத்திரமாக இருப்பவர். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் இந்தியன் 2 ஷங்கர் இயக்கத்தில் உருவான இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை ரசிகர்களிடம் பெறவில்லை. கடந்தாண்டில் வெளியான படங்களில் மிக மோசமான விமர்சனங்களை சந்தித்த படம் இந்தியன் 2 மற்றும் கங்குவா படங்கள்தான்.
அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த தக்லைப் படம் வருகிற ஜூன் மாதம் 5ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இதுகுறித்து ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த படத்தில் முதன்முறையாக கமலுடன் முக்கிய கேரக்டரில் நடிகர் சிலம்பரசனும் நடித்திருக்கிறார்.
தக்லைப் படத்துக்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் அடுத்த படத்தை ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவ் டைரக்ட் செய்கிறார். இது கமல்ஹாசனின் 237வது படமாகும். அமெரிக்காவில் இருந்து கமல் திரும்பியதும் இந்த படத்தின் ஷூட்டிங் துவங்க உள்ளது.
அதற்கு முன்பாக ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 3 படப்பிடிப்பும் நடத்தப்பட வாய்ப்புள்ளது. இரண்டு படங்களிலும் கமல் மாறி மாறி நடிக்கலாம். அல்லது இந்தியன் 3 படப்பிடிப்பை முடித்துவிட்டு, தனது 237வது படத்தில் கமல் நடிக்கவும் வாய்ப்புள்ளது. ஆனால் இந்தியன் 3 படப்பிடிப்பு விஎப்எக்ஸ் பணிகள் முடிய 6 மாதங்கள் கால அவகாசம் தேவை என ஷங்கர் கூறியிருக்கிறார்.
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் 1992ம் ஆண்டில் வெளியான படம் தேவர் மகன். இதில் ரேவதி மனைவி கேரக்டரிலும் கௌதமி காதலி கேரக்டரிலும் கமலுடன் நடித்திருந்தனர். கமலின் தந்தையாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்திருந்தார். பல விருதுகளை வென்ற இந்த படம் கமல் சினிமா கேரியரில் மிகவும் முக்கியமான படமாகும். தமிழ் சினிமாவில் மாஸ் ஹிட் படமாகும்.
இந்த படத்தில் தந்தை சிவாஜி கணேசன் மறைந்த பிறகு, கமல்ஹாசன் அவரை போலவே பெரிய கிடா மீசை வைத்துக்கொண்டு ஊர் தலைவராக மாறி விடுவார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை மீனா, தேவர் மகன் படத்தில் ரேவதி கேரக்டரில் நடிக்க நான்தான் செலக்ட் செய்யப்பட்டேன். ஆனால் கமலுக்கு அந்த பெரிய மீசை வளர தாமதம் ஆனதால், ஷூட்டிங்கை தள்ளி வைத்தனர். அதனால் அந்த படத்துக்கு என்னால் கால்ஷீட் தர முடியவில்லை என்று மீனா கூறியிருக்கிறார்.





