பவர் பாண்டி திரைப்படம் தனுஷ் இயக்கத்தில் வெளியான முதல் படம். ராஜ்கிரண் மற்றும் ரேவதி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த திரைப்படம் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. இளம் வயது காதலை தேடி செல்லும் கதாபாத்திரத்தில் ராஜ்கிரண் கச்சிதமாக பொருந்தி இருந்தார்.
தனுஷா இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார் என ஆச்சரியப்படும் அளவிற்கு பவர் பாண்டி அமைந்திருந்தது. இதனைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் எடுத்த ராயன் திரைப்படமும் வசூல் ரீதியாக சாதனை படைத்தது. கிட்டத்தட்ட 150 கோடி ரூபாய் வசூல் ஈட்டியதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்னும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் தனுஷ். இந்த திரைப்படம் அடுத்த மாதம் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில் தற்போது நான்காவதாக அவர் இட்லி கடை திரைப்படத்தை இயக்கி வருகிறார். தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இது படமாக்கப்பட்டு வருகிறது.
இதில் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருக்கிறார் நித்யா மேனன். ராஜ்கிரனும் முக்கிய கதாபாத்திரத்தில் இடம் பெற்றுள்ளார். இதன் போஸ்டர் அண்மையில் வெளியாகி பலரது எதிர்பார்ப்பையும் தூண்டியது. அதில் இட்லி கடை பீரியட் திரைப்படமாக எடுப்பது பார்க்கும்போதே தெரிவதாக சினிமா விமர்சகர்கள் கூறினார்கள். படம் வரும் ஏப்ரல் பத்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த நிலையில், வெளிநாடுகளில் இட்லி கடை திரைப்படத்தை படமாக்க தனுஷ் திட்டமிட்டுள்ளாராம். ஆனால் அதற்கான தேதிகளை நித்யா மேனன் கொடுக்க மறுத்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகை தற்போது விஜய் சேதுபதி பாண்டிராஜ் கூட்டணியில் உருவாகும் படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்காக மார்ச் மாதத்திற்கு அவர் தேதிகளை கொடுத்திருக்கிறார்.
ஏற்கனவே அவர் கொடுத்த கால் சீட்களை தனுஷ் சரியாக பயன்படுத்தவில்லை என்றும், இதன் காரணமாகவே அவர் தேதியை கொடுக்க மாட்டேன் என்று கூறிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம் தனுஷிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தான் இந்த பிரச்சனை ஏற்பட்டதாக பேசுகிறார்கள். இது குறித்து நடிகையிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.





