கற்றது தமிழ் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் ராம். இந்த படத்தில் ஜீவா அஞ்சலி நடித்திருந்தனர். படம் பெரிய வரவேற்பை பெற்றது. தொடர்ந்து தங்க மீன்கள் தரமணி பேரன்பு உள்ளிட்ட படங்களை ராம் இயக்கி உள்ளார். தங்க மீன்கள் சவரக்கத்தி படங்களில் நாயகனாகவும் ராம் நடித்திருந்தார்.
தற்போது இயக்குனர் ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழுமலை என்ற படம் வருகிற மார்ச் மாதம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் நேற்று மாலை வெளியானது. ஏழு கடல் ஏழுமலை படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
மாநாடு வணங்கான் படங்களை தொடர்ந்து இந்த படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரடக்சன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ளது. படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நிறைவடைந்த நிலையில், சமீபத்தில் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் ஏழு கடல் ஏழுமலை படம் திரையிடப்பட்டது.
அதன் பின்னர் ரஷ்யாவில் மாஸ்கோ நகரில் நடந்த மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவிலும் இந்த படம் திரையிடப்பட்டது. திரைப்பட விழாக்களில் இந்த படத்துக்கு பெரிய அளவில் வரவேற்பும் பாராட்டுகளும் கிடைத்துள்ளன. சமீபத்தில் வெளியான படத்தின் கிளிம்ஸ் வீடியோ மற்றும் பாடல்கள் வைரலான நிலையில் தற்போது இந்த படத்தின் டிரெய்லர் நேற்று மாலை வெளியானது.
ஒரு ரயில் பயணத்தில் நிவின் பாலியும், சூரியும் காணப்படுகின்றனர். ஒரு எலியும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளது. கொடூர மனிதனான நிவின் பாலியிடம் சிக்கிக் கொள்ளும் சூரி தப்பித்தாரா என்பது போன்ற ஒரு காட்சியமைப்பு டிரெய்லரில் வருகிறது. ஒரு காட்சியில் எலியை பிடித்துக் கொண்டு நிவின் பாலியை மிரட்டுகிறார் சூரி.
அதே ரயிலில் பயணிக்கும் நடிகை அஞ்சலியும் முகத்தில் பல அதிர்ச்சிகளை காட்டுகிறார். நீண்ட தூரம் செல்லும் அந்த ரயில் பெட்டியில் பயணிகள் யாருமே இல்லாத நிலையில் இவர்கள் மட்டுமே பயணிப்பது போன்ற காட்சியும் டிரெய்லரில் வருகிறது. அது தவிர காட்டுக்குள் இருக்கும் வினோத மனிதர்களும் இந்த படத்தில் காணப்படுகின்றனர். ராமின் வித்யாசமான படமாக இது இருப்பதால், ஏழுகடல் ஏழுமலை டிரெய்லர் ரசிகர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்து வருகிறது.
வீடியோவை காண கிளிக் செய்யவும்;https://www.youtube.com/watch?v=AATu-TO7trE&t=28s





