கடந்த 1990களில் தமிழ் சினிமாவில் பெண் ரசிகைகளால் சாக்லேட் பாயாக கொண்டாடப்பட்டவர் நடிகர் மாதவன். அலைபாயுதே மின்னலே ஜே ஜே டும் டும் டும் ஆயுத எழுத்து ரன் அன்பே சிவம் நளதமயந்தி ரெண்டு வேட்டை மன்மதன் அம்பு உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்தவர் மாதவன். இப்போது அறிவியல் விஞ்ஞானி ஜிடி நாயுடு வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.
மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே படத்தில்தான் மாதவன் நடிகராக அறிமுகமானார். இதில் ஷாலினி அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தில் ஒரு காட்சியில், நீ அழகா இருக்கறேன்னு நினைக்கலே, உன்னை லவ் பண்ணவும் தோணலே ஆனா இதெல்லாம் நடந்துருமோன்னு பயமா இருக்கு என்று மாதவன் பேசிய டயலாக் இன்றும் டிரண்டிங்கில் இருந்து வருகிறது.
மாதவன் இப்போது நடிப்பு இயக்கம் என 2 விதங்களில் தனது ஆளுமையை வெளிப்படுத்தி வருகிறார். சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இறுதிச்சுற்று படத்தில் அவர் கோச்சிங் டிரெயினிங் மாஸ்டராக சிறப்பான நடிப்பை தந்திருந்தார். இந்த படம் நடிகை ரித்திகா சிங்குக்கும் பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது.
தமிழ் மற்றும் இந்தி சினிமாவில் நடிகராக, இயக்குனராக மாதவன் தற்போது தனது 25 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். நடிகர் கமல்ஹாசனுக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர் மாதவன். அதனால்தான் அன்பே சிவம் மன்மதன் அம்பு படங்களில் அவருக்கு தன்னுடன் நடிக்க வாய்ப்பளித்தார். நளதமயந்தி படத்திலும் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகர் மாதவன் கூறியதாவது, நான் என்னுடைய சினிமா வாழ்க்கையில் 2 விஷயங்களுக்குதான் ரொம்பவும் பயப்பட்டு இருக்கிறேன். அதில் ஒன்று முதல் நாள் ஷூட்டிங்கில் ஈடுபடும்போது, மற்றொன்று படத்தின் ரிலீஸ் தேதி அன்று. முதல் நாள் ஷூட்டிங், படம் ரிலீஸ் என்பது எப்போதுமே எனக்கு பயத்தை தருகிறது.
கடந்த 25 ஆண்டுகளில் சினிமாவில் பயணிப்பது என்பது எளிதான விஷயம் இல்லை. ரசிகர்களின் ஊக்கம் தான் என்னை தொடர்ந்து சினிமாவில் பயணிக்க வைக்கிறது என்று நடிகர் மாதவன் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார். சினிமாவை காட்டிலும் நடிகர் மாதவன் விளம்பர படங்களில் அதிகளவில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





