தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி ஹீரோக்களில் மிக முக்கியமானவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். அவருக்கு கோலிவுட்டில் மார்க்கெட் என்பது தரமாக இருக்கிறது. குழந்தைகள் மற்றும் குடும்ப ஆடியன்ஸ்கள் சிவகார்த்திகேயன் படத்தை விரும்பும் சூழலில் அதற்கு ஏற்றது போல கதைகளை தேடி தேடி சிவகார்த்திகேயன் நடித்து வருவதால் அசைக்க முடியாத வசூல் சக்கரவர்த்தியாக அவர் மாறிவிட்டார்.
சிவகார்த்திகேயனை இங்கு அடுத்த லெவலுக்கு அழைத்து சென்ற திரைப்படம் அமரன். இதனை எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் நாம் அடித்துக் கூறலாம். அந்த அளவுக்கு அந்த திரைப்படம், மிகப்பெரிய வெற்றியை ருசித்து வசூலில் சக்கை போடு போட்டது.
பொதுவாக தீபாவளிக்கு வெளியாகும் திரைப்படத்தில் சோகமான கிளைமாக்ஸ் காட்சிகள் இருந்தால் அது ஆடியன்ஸ்களிடம் எடுபடாது என்று கூறுவார்கள். ஆனால் அதனை சுக்கு நூறாக உடைத்துக் காட்டியவர் சிவகார்த்திகேயன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், கமல்ஹாசன் தயாரிப்பில் வெளியான அமரன் திரைப்படம் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டியது.
இதனைத் தொடர்ந்து தற்போது அவர் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தனது 25வது திரைப்படத்திற்காக அவர் சுதா கொங்கராவுடன் இணைந்திருக்கிறார். இதில் ஜெயம் ரவி அதர்வா உள்ளிட்டோரும் நடித்து வருகிறார்கள். தெலுங்கு நடிகை ஸ்ரீ லீலாவும் இடம் பெற்று இருக்கிறார்.
இந்தி மொழி திணிப்புக்கு எதிரான கதையை தான் இந்த திரைப்படம் கூறுகிறது. இதற்கு பராசக்தி என பெயர் வைக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் அடுத்ததாக டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தியுடன் இணைகிறார். இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
இதனிடையே அவர் ஏ ஆர் முருகதாஸ் உடன் இணைந்து தனது 23வது திரைப்படத்தை நடித்தார். இதன் நடுவிலேயே சல்மான் கான் இயக்கும் வாய்ப்பு முருகதாசுக்கு கிடைத்ததால் இந்த படத்தின் பணிகள் தள்ளிப் போயின. தற்போது இதன் சூட்டிங் நிறைவடைந்திருக்கும் சூழலில், இந்தப் படத்தையும் கடந்த ஆண்டு போல தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக் குழுவினர் திட்டமிட்டு இருக்கிறார்கள். இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இதுவரை வெளியாகவில்லை.





