கடந்த 2007ம் ஆண்டில் பருத்திவீரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் கார்த்தி. நடிகர் சிவகுமாரின் மகன், நடிகர் சூர்யாவின் தம்பி என்று அடையாளங்களை கடந்து இன்றும் பருத்திவீரன் கார்த்தி என்று சொல்லும் அளவுக்கு முதல் படத்திலேயே அவரது கதாபாத்திரத்தை செதுக்கி செதுக்கி நடிக்க வைத்திருந்தார் இயக்குனர் அமீர்.
நடிகர் கார்த்தி இதுவரை 25 படங்களுக்கு மேல் நடித்தும் இன்றும் பருத்திவீரன் கார்த்தி என்பதுதான் அவரது அடையாளமாக இருக்கிறது. கார்த்தி பல வெற்றி படங்களில் நடித்த நிலையில் அவருக்கு மிகப்பெரிய அடையாளமாக மற்றொரு படம் இருந்தது என்றால், அது 2019ம் ஆண்டில் வெளிவந்த கைதி படம் தான்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ஆக்சன் திரில்லர் திரைப்படமான இதில் கார்த்தி நடிப்பு பெரிய அளவில் வரவேற்பை, பாராட்டை பெற்றது. ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்திருந்தது. நடிகர் கார்த்தி இந்த படத்தில் மிகச்சிறந்த ஆக்சன் ஹீரோவாக அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்த படத்தில் கதாநாயகி இல்லை, பாடல்களும் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் 57 நாட்கள் இரவுகளில் நடத்தப்பட்டுள்ளது. படம் முழுக்க முழுக்க இரவு காட்சிகளாகவே இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. கைதி படத்தை தொடர்ந்து கைதி 2 படம் ஏற்கனவே வெளியாகும் என்று படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார். இந்த 2ம் பாகம் எப்போது வெளியாகும் என்பதில் ரசிகர்களுக்கு மிகுந்த ஆர்வமும் எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது.
இப்போது நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமியுடன் நடித்த மெய்யழகன் என்ற படம் வருகிற 27ம் தேதி ரிலீஸ் ஆகிறது. படத்தின் பிரமோ நிகழ்ச்சிக்காக சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த மெய்யழகன் படம் பிரமோ நிகழ்ச்சியில் கார்த்தி கலந்து கொண்டார். அப்போது மெய்யழகன் படம் குறித்த பல்வேறு தகவல்களை அவர் பேசினார். அப்போது ரசிகர்கள் பலரும் கங்குவா படம் குறித்து கேள்வி எழுப்பியதால், நவம்பர் 14ம் தேதி கங்குவா படம் ரிலீஸ் ஆகிறது என்று கார்த்தி தெரிவித்தார்.
அப்போது ரசிகர்கள் கைதி 2 என்று தொடர்ந்து கத்திய நிலையில், கைதி 2 படப்பிடிப்பு பணிகள் அடுத்த ஆண்டு துவங்கும் என்று நடிகர் கார்த்தி கூறினார். இப்போது கார்த்தி, மெய்யழகன் படத்தை தொடர்ந்து சர்தார் 2 படத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படத்தை முடித்துவிட்டு கைதி 2 படப்பிடிப்பில் கலந்து கொள்வார். மேலும் லோகேஷ் கனகராஜ் இப்போது ரஜினி நடிக்கும் கூலி படத்தை இயக்கி வருகிறார். இதை முடித்துவிட்டு கைதி 2 படப்பிடிப்பை அடுத்த ஆண்டில் துவங்க இருப்பதும் தெரிய வந்துள்ளது.





