நடிகர் முரளி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர். பல வெற்றிப் படங்களில் நடித்தவர். அவரது மகன்கள் அதர்வா மற்றும் ஆகாஷ் இருவருமே இப்போது தமிழ் சினிமாவில் நடிகர்களாக மாறி விட்டனர். பல ஆண்டுகளுக்கு முன்பே பாணா காத்தாடி படம் மூலம் முரளியின் மூத்த மகன் அதர்வா அறிமுகமாகி விட்டார்.
தொடர்ந்து சண்டி வீரன் பரதேசி 100 ஈட்டி கணிதன் இமைக்கா நொடிகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இதில் பாலா இயக்கத்தில் அதர்வா நடித்த பரதேசி படம் பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இப்போது அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி, நேசிப்பாயா என்ற படம் மூலம் நாயகனாக அறிமுகமாகி உள்ளார். இந்த படத்தில் அதிதி ஷங்கர் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இந்நிலையில் இப்போது அதர்வா இதயம் முரளி என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த முறை டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், அதர்வா நடிக்கும் இதயம் முரளி படத்தை அவரே டைரக்ஷன் செய்கிறார். இந்த படத்தின் மூலமாக ஆகாஷ் பாஸ்கரன் இயக்குனராக அறிமுகமாகிறார்.
இந்த படத்தில் நட்டி என்கிற நடராஜ் சுப்ரமணியம் ப்ரீத்தி முகுந்தன் கயாடு லோகர் பிரக்யா நக்ரா ரக்ஷன் நிஹாரிகா உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மேலும் இந்த படத்தில் இசையமைப்பாளர் தமன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் என்ற தகவலும் இப்போது வெளியாகி உள்ளது.
கடந்த 2003ம் ஆண்டில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் பாய்ஸ். இந்த படத்தில் சித்தார்த் நாயகனாக நடித்திருப்பார். ஜெனிலியா நாயகியாக நடித்திருப்பார். சித்தார்த்தின் டீன் ஏஜ் நண்பர்களாக படத்தில் மணிகண்டன் பரத் நகுல் ஆகியோருடன் தமனும் இந்த படத்தில் நடித்திருப்பார். இவர் படத்தில் இசையமைக்கும் ஆர்வமுள்ள பையனாக நடித்திருப்பார்.
உண்மையிலும் நிஜ வாழ்க்கையில் தெலுங்கில் பிரபல இசையமைப்பாளராக தமன் இருந்து வருகிறார். தெலுங்கில் பல வெற்றிப் படங்களுக்கு தமன் இசையமைத்துள்ளார். விஜய் நடித்த வாரிசு படத்தின் இசையமைப்பாளர் தமன்தான். சமீபத்தில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான கேம் சேஞ்சர் படத்துக்கும் இசையமைத்திருந்தது தமன்தான். இப்போது 22 ஆண்டுகளுக்கு பிறகு இதயம் முரளி படத்தில் தமன் முக்கிய கேரக்டரில் ரீ என்ட்ரி தருகிறார். இந்த படத்தின் இசையமைப்பாளரும் தமன்தான் என்பது குறிப்பிடத்தக்கது.





