கடந்த 1999ம் ஆண்டில் பாலா இயக்கத்தில் வெளியான முதல் படம் சேது. இது இயக்குனர் பாலாவுக்கும் நடிகர் விக்ரமுக்கும் சினிமா பயணத்தில் மிக முக்கியமான படமாக அமைந்தது. இந்த படத்துக்கு பிறகுதான் சியான் விக்ரம் என்ற அடையாளமே நடிகர் விக்ரமுக்கு கிடைத்தது. இன்றும் சேது படம் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு படமாக உள்ளது.
தமிழ் சினிமாவில் 1990களில் முன்னணி நடிகராக இருந்தவர் செல்வா. ஆத்தா உன் கோவிலிலே ராக்காயி கோயில் சக்திவேல் மைந்தன் நாட்டுப்புற பாட்டு நாட்டுப்புற நாயகன் கோல்மால் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். முகமூடி வலிமை ஈட்டி போன்ற படங்களிலும் சமீபகாலமாக நடித்திருந்தார். இவர் நடிகர் மட்டுமல்ல, இயக்குனர் மற்றும் கதை வசனகர்த்தா என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் செல்வா சேது படம் குறித்து கூறியதாவது, இயக்குனர் பாலா சேது படத்தின் கதையை முதலில் என்னிடம்தான் சொன்னார். அந்த கேரக்டரில் மொட்டை போட்டுக்கொண்டு நடிக்கவும் நான் தயாராக இருந்தேன். இதற்காக நான் நடித்துக்கொண்டு இருந்த 3 படங்களையுமு் சீக்கிரமாக நடித்து முடித்து விட்டேன்.
சியான் சியான் என்ற பாடல் ஒன்றும் ரெக்கார்டிங் தியேட்டரில் பதிவு செய்யப்பட்டது. அந்த படத்துக்கு முதலில் வைத்த பெயர் அகிலன். ஆனால் நாளடைவில் அப்படியே அந்த படம் தடைபட்டு போய் விட்டது. அந்த படம் நிதி பிரச்னைகளால் எடுக்கப்படவில்லை. அதற்கு பிறகும் பல ஹீரோக்களிடம் பாலா கதை சொல்லியும் அந்த படம் உருவாவதில் சிக்கலும் பிரச்னைகளும் நீடித்தது.
அப்புறம் 6 ஆண்டுகள் கழித்து, கோல்மால் என்ற படத்தில் நான் நடித்துக்கொண்டு இருந்தேன். அப்போது கோல்மால் படத்தில் 2வது நாயகியாக அபிதா நடித்துக் கொண்டு இருந்தார். அப்போது அவர் சொல்லிதான் எனக்கு பாலா இயக்கத்தில் சேது படம் படப்பிடிப்பு நடப்பதும், அதில் விக்ரம் நாயகனாக நடிப்பதும், அபிதா நாயகியாக நடிப்பதும் தெரிய வந்தது.
ஆனால் 6 ஆண்டுகளுக்கு முன் என்னிடம் என்ன கதையை பாலா சொன்னாரே அதையேதான் 6 ஆண்டுகளுக்கு பின் விக்ரம் நடிக்கும் போது அந்த படத்தின் கதையாக மாறாமல் எடுத்துக்கொண்டு இருந்தார். அந்த மன உறுதியும் தன்னம்பிக்கையும் மிகவும் பாராட்டுக்கு உரியது என்று நடிகர் செல்வா கூறியிருக்கிறார்.





